திங்கள், வெள்ளி வேண்டாம்.. செந்தில் பாலாஜி மனு.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போது பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அவரது முறையிட்டு மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓராண்டிற்கு மேல் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தார்.

சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி கைதாகி இருந்த காரணத்தால், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சுமார் 3,000 முதல் 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும், ஆதார ஆவணங்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சராக (2011-2015 அதிமுக ஆட்சியில்) இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிக்கையில், செந்தில் பாலாஜி இந்த மோசடி மூலம் ஈட்டிய பணத்தை, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், பல வழிமுறைகளில் மறைத்து, பரிமாற்றம் செய்து, தனது சொத்துகளாக மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை அப்போது பட்டியலிட்டது.
குறிப்பிட்ட வழக்கில் 47 முக்கிய நபர்கள் மீது பிரதான குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் சாட்சிகளாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறுவிவாதங்களுக்கு பிறகு நீண்ட காலமாக சிறையில் உள்ளார் என்ற அடிப்படையில், பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. உச்ச நீதிமன்றம் ஜாமீன் தரும் போது, சில முக்கிய ஜாமீன் நிபந்தனைகளை விதித்து. ₹25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளிநாடு செல்லக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், விசாரணை முடிந்து விட்டதால், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சோயிப் ஹுசைன் ஆட்சேபனை தெரிவித்தார். இப்போது எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வாரம் ஒரு முறை மட்டும் ஆஜரானால் போதுமென்று அமலாக்கத்துறை கருதினால் அது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்து, செந்தில் பாலாஜியின் மனுவுக்கு டிசம்பர் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications