மகளிர் உரிமை தொகை.. உச்ச நீதிமன்றம் திடீரென கேட்ட சரமாரி கேள்வி.. என்ன நடந்தது?
சென்னை: காட்டு பகுதிகளில் உள்ள நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டதற்கும், பாதிக்கப்பட்ட தனியாருக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மகாராஷ்டிரா அரசு பதில் அளிக்காததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'லாட்லி பெஹ்னா' மற்றும் 'லட்கா பாவ்' திட்டங்களின் கீழ் இலவசங்களை விநியோகிக்க மகாராஷ்டிரா அரசிடம் நிதி உள்ளது, மகளிருக்கு மாதம் பணம் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டங்களுக்கு பணம் உள்ளது.. ஆனால் நில இழப்பீடு வழங்க பணம் செலுத்த முடியாதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சனம் செய்தது. அரசு பல திட்டங்களுக்காக காட்டு பகுதிகளில் உள்ள நிலங்களை எடுத்துள்ளது. அதேபோல் குடியிருப்பு நிலங்களை வாங்கி உள்ளது.

இந்த நிலங்களுக்கான இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை மகாராஷ்டிரா அரசுக்கு அவகாசம் அளித்தது.
மகாராஷ்டிராவில் வன நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில்.. அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய சொல்லியும் தாக்கல் செய்யவில்லை. இழப்பீடும் வழங்கவில்லை. உங்களுக்கு இலவசமாக பணம் கொடுக்க நிதி உள்ளது, மகளிருக்கு மாதம் ரூ . 1500 கொடுக்க நிதி உள்ளது .
ஆனால் இழப்பீடு வழங்க நிதி கிடையாதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாநில அரசு அறிவித்த 'முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனா' திட்டத்தின் கீழ், குடும்ப வருமானம் ₹ 2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 21 முதல் 65 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு ₹ 1,500 அனுப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மகளிர் உரிமை தொகை திட்டம்தான் இந்த திட்டத்திற்கு முன்னோடி ஆகும்.
தமிழ்நாடு முன்னோடி: 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும், அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல் நலம் காக்கவும் இந்தச் சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் பெண்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்பச் சொத்துகள் அனைத்திலும் சமமாகப் பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே திட்டத்தை மகாராஷ்டிரா அரசும் தற்போது பின்பற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications