விநோதம்.. விஜயதாரணிக்கு டக்கென ரோஜாப்பூ தந்த அதிமுக எம்எல்ஏ.. ஏன் தெரியுமா?.. வியந்த சட்டசபை.. சபாஷ்
விஜயதாரணிக்கு அதிமுக எம்எல்ஏ ரோஜாப்பூ தந்து வாழ்த்தினார்சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு, அதிமுக எம்எல்ஏ ரோஜாப்பூ தந்து வாழ்த்து சொன்னதுமே, பேரவையில் நெகிழ்ச்சி ஏற்பட்டது..!
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார்...

கன்னியாகுமரி
நீர்வள துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேசினார்... அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய மற்றும் சிறிய என மொத்தம் 4,500 குளங்கள் இருந்தன.. ஆனால் இப்போது வெறும் 2500 குளங்கள் மட்டுமே இருக்கின்றன.. அதனால் மற்ற குளங்களையும் உடனடியாக மீட்க வேண்டும்.. இப்படி செய்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் மக்கள் விவசாயம் செழிக்கும் என்று பேச்சை தொடர்ந்தார்.

அதிமுக
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடக்கூடாது என்று திமுகவுக்கு கோரிக்கை வைத்த விஜயதாரணி, திடீரென அதிமுக அரசின் திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தின் பலன்கள், பயன்கள் குறித்தும் ஆதரித்தும் பேசினார்.. இதைக் கேட்டதும் அதிமுகவினருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.. ஒருகட்டத்தில், பாப்பாரப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தன் அருகில் இருந்த ரோஜா பூக்களை பெற்றுக் கொண்டு விஜயதாரணியிடம் கொண்டு போய் வழங்கினார்..

தாலிக்கு தங்கம்
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, அதிமுக செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டத்தைச் செயல்படுத்த கோரிக்கை விடுத்ததுமே, அதற்கு ஆதரவு தெரிவித்து மேஜைகளை தட்டி அதிமுகவினர் வாழ்த்து சொன்னார்கள்.. சமீபகாலமாகவே அரசியல் நாகரிகம் தமிழக சட்டசபையில் மலர்ந்து வருகிறது.. அன்றைய காலகட்டங்களில் இப்படியான அரசியல் நாகரீகங்கள் தினம் தினம் நடந்து கொண்டிருந்தன.

எம்ஜிஆர்
சட்டமன்றத்தில் அப்போது காமராஜரின் படம் வைக்கப்பட்டபோது, அந்த படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி எழுதலாம் என்று கருணாநிதியிடம் ஆலோசனை கேட்டார் முதல்வர் எம்ஜிஆர்... 'உழைப்பே உயர்வு தரும்' என்று கலைஞர் சொல்ல, அதே பொன்மொழியை பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர் பதித்தார்.. அவ்வளவு ஏன்? காரசார விவாதம் சட்டமன்றத்தில் நடந்துமுடிந்த அடுத்த வினாடியே, எம்ஜிஆரும், கலைஞரும் ஒன்றாக உட்கார்ந்து சிரித்து பேசிய தருணங்கள் எத்தனையோ?

பாடிலேங்குவேஜ்
அதேபோல, துரைமுருகன் ஏதாவது ஜோக் அடித்தால், குலுங்கி குலுங்கி சிரித்துவிடுவார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.. "துரைமுருகனின் பாடிலேங்குவேஜ்ஜை பார்க்கும்போது, அவர் சினிமாவில் நடித்திருந்தால் எங்கோ புகழின் உச்சிக்கு போயிருப்பார்" என்றெல்லாம் ஜெயலலிதா சிரித்தபடியே சொல்வார்.. இதற்கு பிறகு நடுவில் இதுபோன்ற அரசியல் நாகரீகங்களை சட்டசபை மறந்திருந்த நேரம், தற்போது ஸ்டாலின் ஆட்சி காலத்தில் அது மீண்டும் மலர்ந்துள்ளது. என் அப்பா கலைஞரின் விசிறி என்று ஓபிஎஸ் சொல்வதிலேயே அது தெரிந்தது.

ரோஜாப்பூ
விஜயதாரணி காங்கிரஸ் என்றாலும்கூட, அதிமுகவினர் ரோஜாப்பூ தந்து வாழ்த்தியதும், அதை பேரவையே கைகளை தட்டி வரவேற்றதும்கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதற்கெல்லாம் காரணம், அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும், கருத்துரிமை, பேச்சுரிமையை முதல்வர் வழங்கி உள்ளதுதான்.. அரசியல் நாகரீகம் மண்ணோடு மண்ணாக போவதில்லை.. அது என்றுமே தமிழக அரசியல் சட்டசபையில் வேர்விட்டு கொண்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை..!












Click it and Unblock the Notifications