ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர்
சென்னை: ஜனநாயகன் படத்தை இணையத்தில் யார் லீக் செய்திருப்பார்கள் என்பது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தை விஜய்யே வெளியிட்டிருப்பாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே, திரையுலகில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் லீக் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காய்ச்சலை விட, "ஜனநாயகன் படத்தை பார்த்துட்டியா?" என்ற கேள்விதான் இன்று சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் எதிரொலித்து வருகிறது. அதிகாலை நடைப்பயிற்சியின் போது கூட இளைஞர்கள் தங்கள் கைபேசியில் இந்த முழுப் படத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது அதிர்ச்சியளிக்கிறது.
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு வெளியாகும் படம் என்பதால், இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் தரப்பில் லாபத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், படம் இப்படி இணையத்தில் கசிந்தது பேரிடியாக அமைந்துள்ளது.
சென்சார் அதிகாரிகளோ அல்லது தியேட்டர் உரிமையாளர்களோ இதை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கியூப் (Qube) போன்ற நவீன தொழில்நுட்பத்தில் தயாரிப்பாளரின் ரகசிய குறியீடு (KTM Key) இல்லாமல் படத்தை திரையிடவே முடியாது.
இந்த லீக் விவகாரத்தின் பின்னணியில் விஜய்யே இருக்கலாம் என்று சிலர் கிளப்பிவிடும் வதந்திகளில் உண்மையில்லை. ஏனெனில், படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், நேரடியாக ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டிருக்கலாம்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி இலவசமாக வெளியிடுவதால் அவருக்கு எந்த லாபமும் இல்லை. மாறாக, இது தயாரிப்பாளருக்கு ஈடுகட்ட முடியாத நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
படத்தின் எடிட்டிங் பணிகளின் போதோ அல்லது வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் மூலமாகவோ இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக, படத்தில் விஜய் அம்பேத்கர் புத்தகத்தை ஏந்தி வரும் காட்சிகள் அவரது அரசியல் பிம்பத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்பம் வளர வளர, ஒரு படைப்பை பாதுகாப்பது சவாலாகிவிட்டது. சிசிடிவி கேமராக்கள் குற்றத்தை காட்டுமே தவிர, குற்றவாளியை தடுத்து நிறுத்தாது என்பது போலத்தான் இதுவும் உள்ளது. இறுதியாக, இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும் தேவையற்றது.
எதற்கெடுத்தாலும் ஆளுங்கட்சியின் சதி என்று கூறுவது முறையல்ல. ஒரு பெரிய முதலீட்டு படம் இப்படி வெளியாவது தமிழ் சினிமாவிற்கே ஆரோக்கியமானது அல்ல. திருட்டுத்தனமாக படம் பார்ப்பதை தவிர்த்து, தியேட்டரில் பார்ப்பதே கலைஞர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இந்த படத்தை தணிக்கை துறையினர் வெளியிட வாய்ப்பே இல்லை.
அந்த படத்தை அவர்கள் பார்த்து முடித்ததும் அதுவாகவே அழிந்து விடும். அவர்களே பார்க்க வேண்டும் என்றால் கூட முடியாது. தயாரிப்பாளரிடம்தான் அந்த கீ இருக்கும். அவரே அந்த கீயை உள்ளிடுவார், அது வேறு யாருக்கும் தெரியாது. இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications