இந்திய மக்களே.. தேசபக்தராக ஒரு அரிய வாய்ப்பு! “தொடர்பு கொள்க.. அண்ணாமலை”.. திமுக கிண்டல்!
சென்னை : "இந்திய மக்களே.. நீங்கள் தேசபக்தராக புனிதம் பெற அந்நிய நாடு சுவிட்சர்லாந்து ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.. தொடர்புக்கு அண்ணாமலை, கமலாலயம்" என கிண்டல் செய்துள்ளார் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 4 லட்சத்திற்கும் மேல் விலை கொண்ட ரஃபேல் வாட்ச் அணிந்திருப்பது சர்ச்சைக்குள்ளான நிலையில் நான் தேசியவாதி, அதனால் ரஃபேல் வாட்ச் கட்டியுள்ளேன் என அண்ணாமலை தெரிவித்தார். இதனை, திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, "4.40 லட்சம் பணம் இருந்தால் போதும் ஒரு ரஃபேல் வாட்ச் வாங்கி புனித பட்டம் பெறலாம்!" என கிண்டல் செய்துள்ளார்.

அண்ணாமலை வாட்ச்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் தொடர்பாக சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக நேற்று கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தற்போது நான் போடும் சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் மற்றும் கார் எல்லாவற்றையும் ஆய்வு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது.

ரஃபேல் வாட்ச்
நான் கையில் கட்டியிருப்பது ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கைக்கடிகாரம். ரஃபேல் விமானத்தை தயாரித்த அதே நிறுவனம் மொத்தம் 500 கைக்கடிகாரங்களை தயாரித்தது. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கிறேன், என் உடம்பில் உயிர் உள்ளவரை என் உடம்பில் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். ஏனென்றால் நான் தேசியவாதி எனத் தெரிவித்தார்.

ஆடு வளர்த்த காசு?
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்ச்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?" என கேள்வி எழுப்பி இருந்தார்.

நான் ரெடி - அண்ணாமலை சவால்
இதையடுத்து, அண்ணாமலை சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், திமுக என் மீது ஊழல் குற்றம் சுமத்த விரும்பினால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மே 2021-ல் நான் தமிழக பாஜக தலைவராக ஆவதற்கு முன்பு வாங்கப்பட்ட எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் பில் மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், எனது 10 வருட எனது வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து தேசபக்தர்
அண்ணாமலையின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ள திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, "தேச துரோகியாக இருந்து, வாழ்ந்து வந்த ஏழை விவசாயி மகன் அண்ணாமலை, பல லட்சம் ரூபாய் செலவு செய்து சுவிட்சர்லாந்து நாட்டில் 2021ல் மே மாதம் தான் ரஃபேல் வாட்ச் வாங்கி தேசபக்தர் பட்டம் வாங்கி உள்ளார் போல! வாழ்த்துகள் சுவிட்சர்லாந்து தேசபக்தர் அண்ணாமலை அவர்களே!!" எனத் தெரிவித்துள்ளார்.

தேசபக்தராக அரிய வாய்ப்பு
மேலும் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்திய மக்களே.. நீங்கள் தேசபக்தராக புனிதம் பெற அந்நிய நாடு சுவிட்சர்லாந்து ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளது! 4.40 லட்சம் பணம் இருந்தால் போதும் ஒரு ரஃபேல் வாட்ச் வாங்கி புனித பட்டம் பெறலாம்! தொடர்புக்கு அண்ணாமலை, கமலாலயம்,சென்னை!
குறிப்பு : புரோக்கர் கமிஷன் கட்டாயம்!" என கிண்டல் செய்துள்ளார்.

சாட்சாத் பாஜக தான்
முன்னதாக, ராஜீவ் காந்தி ஒரு ட்வீட்டில், புதிதாக வாட்ச்,சட்டை போன்ற தனிப்பட்ட பொருட்களை வைத்து அரசியல் செய்கிறார்கள் என அண்ணாமலை கூறி இருந்ததற்கு பதிலடி கொடுத்திருந்தார். "ராகுல் காந்தி போட்ட டிஷர்ட்டையும், நடிகை போட்ட பிகினியையும் வைத்து அரசியல் செய்கிற கட்சி சாட்சாத் பாஜக தான்" என அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications