சாதனை தமிழர்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்.. வருண் சக்கரவர்த்தி கொடுத்த பரிசு!
சென்னை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த தமிழக வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு இருவரும் ஜெர்சியை பரிசாக அளித்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலமாக 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதோடு, தொடர்ந்து 2வது முறையாக டி20 உலகக்கோப்பையையும் வென்று இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் முக்கிய காரணமாக அமைந்தார். ஏனென்றால் 9 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி ஃபார்மில் அவுட்டில் இருந்த போதும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ராவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இரு தமிழர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. டி20 உலகக்கோப்பை தொடரை வென்றுவிட்டு சென்னை திரும்பிய இருவரும், நேராக திருவண்ணாமலை சென்று கிரிவலத்தில் ஈடுபட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அப்போது வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தங்களின் கையெழுத்திட்ட ஜெர்சியை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக அளித்தனர். இதற்கு முன் ஸ்டாலின் இருவருக்கும் சால்வை அணித்து திருவள்ளுவர் சிலை கொடுத்து வாழ்த்தினார்.
அதேபோல் இந்திய அணியின் அனலிஸ்ட்டான ஹரி பிரசாத்தையும் ஸ்டாலின் வாழ்த்தி இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். இந்த சந்திப்பின் போது ஹரி பிரசாத்தும் உடனிருந்தார். வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பவுலிங் சிறப்பாக அமைந்ததற்கு ஹரி பிரசாத்தும் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications