தாம்பரம் - செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூர்-கூடுவாஞ்சேரி-ஆவடி.. ரயில்வே மூன்று பெரிய திட்டங்கள்
சென்னை: தெற்கு ரயில்வே சென்னையை சுற்றிலும், மூன்று பெரிய திட்டங்களை செயல்படுத்த போகிறது.. இந்த மூன்று திட்டங்களுமே தாம்பரம் செங்கல்பட்டு, ஆவடி என சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக திட்டங்கள் வரப்போகிறது. இந்த மூன்று திட்டங்கள் காரணமாக அந்த பகுதியில் வருங்காலத்தில் வளர்ச்சி பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளும் மிகவும் எளிதாக வாய்ப்பு உள்ளது.
சென்னை - செங்கல்பட்டு மார்க்கத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ரயில்களின் இயக்கத்தை மேம்படுத்தவும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே 60 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் தினமும் சுமார் நான்கு லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் 23 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஏழு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே திட்டம்
இந்த வழித்தடத்தில் கடற்கரை தாம்பரம் இடையே நான்கு பாதைகள் உள்ளன. ஆனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்று பாதைகள் தான் உள்ளது. இதன் காரணமாக தாம்பரத்துடன் பல மின்சார ரயில்கள் நின்றுவிடுகின்றன. போதிய அளவு செங்கல்பட்டு மின்சார ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்தது. அதற்கு ஆய்வு பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் நிலம் எடுப்பது தொடர்பான இறுதி இட ஆய்வுப் பணியை (Final Location Survey - FLS) தெற்கு ரயில்வே அண்மையில் நிறைவு செய்தது.
தாம்பரம் செங்கல்பட்டு 4வது பாதை
தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட உள்ள 31 கி.மீ. நீளமுள்ள நான்காவது பாதையில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகம் செல்ல முடியுமாம். இந்த பாதை தண்டவாளங்களின் கிழக்கு பக்கமாக , அதாவது ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைக்கப்பட உள்ளதாம். . இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 713.4 கோடி ஆகும். இந்த திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன், பணிகள் தொடங்கும். இந்த திட்டம் 100 சதவீதம் முழுமையாக ரயில்வேயால் நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இந்த பாதை திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
காட்டாங்குளத்தூரில் சரக்குமுனையம் திட்டம்
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் பொத்தேரியில் (காட்டாங்குளத்தூர் மற்றும் கூடுவாஞ்சேரிக்கு இடையே) ஒரு சரக்கு முனையத்தை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது தற்போது நான்காவது பாதை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி சரக்கு முனையம் பொத்தேரியில் அமைக்கப்பட்டால் அந்த பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு அடியோடு மாறிவிடும். அதேபோல் ஏராளமான நிறுவனங்கள் அந்த பகுதியில் புதிதாக உருவாகவும் வாய்ப்பு உள்ளது.
ஆவடி-கூடுவாஞ்சேரி ரயில் பாதை
பொதுமக்கள் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே 58 கி.மீ. தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் ரயில் செயல்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை நகரின் மேற்கு மற்றும் தென் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் இந்தத் திட்டம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளுக்கு ரயில் இணைப்பை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டு வருகிறது.
ஆவடியில் தொடங்கி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரியை அடையும் இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் உட்பட மொத்த திட்ட மதிப்பு சுமார் ₹3,136 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
43 லட்சம் மக்களுக்கு நல்லது
இந்த வழித்தடத்தில் ஆவடி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், வல்லக்கோட்டை, ஒரகடம், நாட்டரசன்பட்டு, கூடுவாஞ்சேரி என மொத்தம் 10 புதிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த ரயில் வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால் ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 43 லட்சம் பயணிகள் பயன்பெறுவார்கள்.
ரயில்வே வாரியம் ஒப்புதல் எப்போது
அதுமட்டுமின்றி, ஆட்டோமொபைல் மற்றும் பிற பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் சரக்குப் போக்குவரத்துக்கு மிகப்பெரிய இணைப்பாக இருக்கும். இந்த திட்டமும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ரயில்வே வாரியம் தாம்பரம் செங்கல்பட்டு நான்காவது பாதை, கூடுவாஞ்சேரி ஆவடி புதிய ரயில் வழித்தடம் ஆகியவற்றுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications