2015இல் வெள்ளத்தில் சிக்கிய தாம்பரம் .. இப்போது தப்பியது எப்படி?
சென்னை: 2015இல் வெள்ளத்தில் சிக்கிய தாம்பரம் முடிச்சூர் பகுதிகள் இப்போதைய மழைக்கு வெள்ளத்தில் இருந்து தப்பி உள்ளன. அடையாறு ஆற்றங்கரை ஓரப் பகுதிகள் தூர்வாரப்பட்டதால், தாம்பரம் வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் மழை பெய்தது .
3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது என்பதே 2015 டிசம்பர் வெள்ளம் வரக் காரணம். அந்த ஆண்டில் வட கிழக்கு பருவ மழையில் வழக்கத்துக்கு மாறாக 104% அதிக மழை பதிவாகியது. சென்னையில் இந்த காலத்தில் சராசரியாக 789 மி.மீ மழை தான் பதிவாகும். ஆனால் 2015 ஆண்டு 1608.6 மி.மீ மழை பதிவானது.

12 மணி நேரத்தில் பெய்தது
297.1 மி.மீ அளவு மழை 12 மணி நேரத்தில் பெய்ததால் சென்னை மோசமான பாதிப்பை எதிர்கொண்டது . ஏற்கனவே அந்த சமயத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் சிக்கி இருந்தன.
அப்படியான சூழலில் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியில் பல்லாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதால் தாம்பரம் முடிச்சூர் , வரதராஜபுரம் , அணைகாபுத்தூர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான் பேட்டை, கிண்டி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. உயிர்களையும் உடமைகளையும் ஒருநாள் இரவில் மக்கள் இழந்தனர்.

கொரட்டூர்
மறுபக்கம் கொரட்டூர், வேளச்சேரி பள்ளிக்கரணை தரமணி போன்ற பகுதிகளும் கடுமையான வெள்ள நீரில் மூழ்கின. வடசென்னை பகுதிகளும் வெள்ள நீரில் தப்பவில்லை. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மின்சாரம் தடைபட்டது வீடுகளில் வெள்ள நீர் வடிய சில வாரங்கள் ஆனது. முதல் மாடி இரண்டாவது மாடி வரை சில பகுதிகளில் தண்ணீர் வந்தது. 2015ஆம் ஆண்டில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட தாம்பரம் முடிச்சூர் பகுதிகள் இந்த முறை வெள்ளத்தில் சிக்கவில்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இத்தனைக்கும் 2005 ஆம் ஆண்டு பெய்த மழை அளவிற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போது மழை பெய்துள்ளது. முக்கியமான காரணம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தான். எங்கெல்லாம் வெள்ளம் ஊருக்குள் வர காரணமான இடங்கள் என்பதை கண்டறிந்து அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக இடித்து அகற்றினார்கள்.
Recommended Video

அடையாறு ஆறு
அத்துடன் முடிச்சூர் வரதராஜபுரம் தாம்பரம் போன்ற பகுதிகளில் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கரைகள் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டன. அடையாறு ஆறு முழுவதுமே தூய்மைப்படுத்தப்பட்டு ஆள படுத்தப்பட்டது. இதனால் இப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் 2,000 கன அடிக்கு மேல் வந்த போதிலும் பெரிதாக தாம்பரம் பகுதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிய அளவில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது . அதுவும் பின்னர் வடிந்துவிட்டது.

சிறப்பு அதிகாரி
ஊரக வளர்ச்சிதுறை முதன்மை செயலாளர் அமுதா, செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இதனை கண்காணிக்கும் பணியில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று அடையார் ஆறு தொடங்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் உள்ள ஜூரோ பாயிண்ட் (zero point)பகுதியில் அமைக்கபட்டிருக்கும் அணையிலிருந்து வெளியேறும் நீரோட்டத்தை பார்வையிட்டார்.மழை காலத்தில் கடுமையாக பாதிக்கபடும் அடையார் ஆற்றங்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளான முடிச்சூர் ,வரதராஜபுரம் ராயப்பன் நகர், கவுல் பஜார் ,அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர் ஓட்டத்தையும் ஆய்வு செய்தார்.

2015 வெள்ளம் பாடம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதன்மை செயலாளர் அமுதா , கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர்கள் இணைந்து கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு அடையாறு ஆறு அகலப்படுத்தபட்டு கரைகள் பலப்படுத்தபட்டுள்ளதால் வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது.
ஒரு சில இடங்களில் அடையார் ஆறு குறுகலான பாதையில் செல்வதால் அருகில் இருக்கும் தனியார் நிலத்தினையும் கையகபடுத்தி அகலபடுத்துவதற்கான நடவடிக்கையினை மாவட்ட ஆட்சியர் மூலம் எடுக்கப்படும்.

கால்வாய் அடைப்பு
மழை நீர் செல்லும் கால்வாய்களில் எந்தெந்த இடத்தில் அடைப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரும் பணிகள் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன்.

நீர்நிலைகள் தூர்வாருதல்
அடையார் ஆற்றங்கரை முடிச்சூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்துள்ளதால் கடந்த வெள்ள பெருக்கு போல் தற்போது எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முடிச்சூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அமுதா ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications