தாம்பரத்தில் பள்ளி சென்ற 13 வயது சிறுவன் மாயம்.. 2 ஆண்டுகளாக தவிக்கும் தாய்.. தலையிட்ட ஐகோர்ட்
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த கிரிஷ்வந்த் என்ற 13 வயது சிறுவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். அவரை காணவில்லை என அவரது தாய் புகார் அளித்தார். அத் புகாரின் பேரில் போலீசார் சிறுவனை தேடி வருகிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாகவும் இன்று வரை சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த வழக்கில் தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2021 மற்றும் 2022 ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் காணாமல் போன குழந்தைகள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களின் படி, 2021ம் ஆண்டு 78,100 குழந்தைகள் காணாமல் போயிந்தன. இவர்களில் சுமார் 70,100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2022ம் ஆண்டு நிலவரப்படி, 83,350 குழந்தைகள் காணாமல் போனார்கள். இதில் 80,561 மீட்கப்பட்டார்கள். ஒட்டுமொத்தமாக 2021, 2022ம் ஆண்டுகளில் சேர்த்து சுமார் 1,61,450 பேர் காணாமல் போனார்கள்.

குழந்தைகள் காணவில்லை
அவர்களில் சுமார் 1,50,661 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிலவரம் என்ன ஆனது என்றே கண்டுபிடிக்கப்படவில்லை.. தமிழ்நாட்டில் சாராசரியாக 6000 குழந்தைகள் காணாமல் போனதாக புள்ளி விவரங்கள் உள்ளன. ஆனால் மீட்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் சரியாக தெரியவில்லை.. வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், வழி தெரியாமல வேறு ஊரில் போய் வாழும் குழந்தைகள் என பல்வேறுவகையில் குழந்தைகள் மாயமாகிறார்கள். இதில் வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகளை தான் கண்டுபிடிப்பது சவலானதாக உள்ளது. சென்னை தாம்பரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தாம்பரத்தில் சிறுவன் மாயம்
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவன் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பள்ளிக்கு சென்ற கிரிஷ்வந்த் (வயது 13) என்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவுசெய்திருந்தார்கள்.
தவிக்கும் தாய்
சேலையூர் போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக சிறுவனை தேடினார்கள். சிறுவன் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளான். அவன் சென்ற சைக்கிளையும் மீட்க முடியவில்லை. சிறுவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனின் தாயார், வீட்டுவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிகறார். போலீசாரோடு சேர்ந்து அவரும் மகனை தேடிபார்த்தார். கண்டுபிடிக்க முடியாமல் தாய் தவித்து வருகிறார்.
தனிப்படை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனால் உயர்நீதிமன்றத்தின் உதவியை அந்த தாய் நாடினார். தனிப்படை அமைத்து விரைவாக கண்டுபிடித்து தர போலீசுக்கு உத்தரவிடுமாறு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு, சென்னை போலீசில் செயல்படும் கடத்தல் தடுப்பு பிரிவை களத்தில் இறக்கி தீவிரமாக தேடி சிறுவனை மீட்குமாறு உத்தரவிட்டது.
செல்போன் எண் அறிவிப்பு
அதன்பேரில் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படையினர் சிறுவனை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையில் தற்போது இறங்கியுள்ளனர். சிறுவனின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 9940154325 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications