"கை" காட்டும் காங்கிரஸ்.. உற்று கவனிக்கும் விஜய்! திமுக கூட்டணியில் திடீர் தயக்கம் ஏன்! பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் சீக்கிரமே சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் திடீரென கூட்டாட்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது கவனிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது. காங்கிரஸ் இந்த நேரத்தில் இந்தக் கோரிக்கையை வைக்க என்ன காரணம். இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆரம்பித்துவிட்டன. குறிப்பாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது.

காங்கிரஸ் திட்டம்
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகபட்ச இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. அதற்கான ஒரு உத்தியாகவே கூட்டாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு என்பதை முன்வைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் அதிக இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்றே காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸை பொறுத்தவரை கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர்கள் மொத்தம் 25 சீட்களில் போட்டியிட்டது. கடந்த 2001 தேர்தலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் போட்டியிட்ட குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும். 2001ல் தேர்தல் சமயத்தில் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் வலுவாக இருந்தது. அவர்களுக்கு 32 சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு 14 சீட் கிடைத்தது. அதைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 2021ல் தான் குறைந்தபட்சமாக 25 இடங்களில் போட்டியிட்டது.
காங்கிரஸ் டார்கெட்
ஆனால், இந்த முறை குறைந்தது 40 இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதைக் காங்கிரஸ் இலக்காக வைத்து இருக்கிறதாம். ஆனால், திமுக தரப்பு அதிகபட்சம் 32 இடங்களை மட்டுமே வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே 38 சீட் என்றாலே ஓகே என்று காங்கிரஸ் கேட்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுக தரப்பு இதற்குச் சம்மதிக்கவில்லை.
இந்தச் சூழலில் தான் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. திமுக கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியிலும் பங்கு வேண்டும் எனக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். இது காங்கிரஸ் தனது தேர்தல் வியூக மாற்றி இருப்பதையே பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை இங்குக் கூட்டணி ஆட்சி அமைந்ததே இல்லை. திமுக- அதிமுக என மாநிலத்தை ஆளும் இரு கட்சிகளுமே கூட்டணி ஆட்சிக்கு விருப்பம் தெரிவித்தே இல்லை. இதனால் கடந்த காலங்களில் இது பெரிதாகப் பேசப்பட்டதும் இல்லை.
விஜய்
ஆனால், இந்த முறை தேர்தல் களத்தில் புதிதாக விஜய் கட்சி உள்ளே வந்துள்ளது. தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே தவெக வென்றால் கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார் விஜய். அப்போது எந்தவொரு கட்சியும் தவெக பக்கம் போகவில்லை என்ற போதிலும் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில் காங்கிரஸ் விஜய் பக்கம் போகலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் தான் தவெகவும் கூட காங்கிரஸ் தான் தனது இயற்கையான பார்ட்னர் எனக் கூறியிருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
முயற்சிகள்
தவெக உடன் கூட்டணியை அமைக்க ராகுல் காந்தியை சம்மதிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாகவும் இதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இருந்தே சில தலைவர்கள் தொடர்ந்து முயல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் மற்றும் ராகுல் காந்தி நண்பர்களாக இருப்பதால் இந்தக் கூட்டணி சாத்தியம் தான் என்றே தவெக தரப்பும் கூறுகிறது.
இந்தச் சூழலில், தவெக முக்கிய நிர்வாகியான நிர்மல் குமார், கூட்டணி குறித்த முக்கிய முடிவுகள் கட்சித் தலைவர் விஜய்யின் விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னரே எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "எங்கள் தலைவர் கூட்டணி குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அறிவிப்பார். தேர்தலுக்கு இன்னும் பல வாரங்கள் உள்ளன. சரியான நேரத்தில் தேவையான அறிவிப்பு வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications