தமிழக தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பால் சர்ச்சை
சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் உதவி காப்பாட்சியர் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நேற்று நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதில் தொல்லியல் துறையின் உதவி காப்பாட்சியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் சம்ஸ்கிருத அறிவு பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இது குறித்த அறிவிப்பில், “உதவி காப்பாட்சியர் (தொல்லியல்) பணிக்கு சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்படி கல்வித் தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாத பட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர். சமஸ்கிருதத்தில் உயர் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தின் உதவி காப்பாட்சியர் பணிக்கு சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். பண்டைய வரலாறு, தொல்லியல், விலங்கியல், தாவரவியல், நிலத்தியல், வரலாறு என இதில் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (சமஸ்கிருதத்தில் பணி அறிவுடன்)” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பொற்பனைக்கோட்டை, மருங்கூர், சென்னானூர், கீழடி என பல்வேறு இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் நாணயங்கள், முதுமக்கள் தாழி, பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள் என பல கிடைத்திருக்கின்றன. இப்படி கிடைத்த சில பொருட்களில் கல்வெட்டுக்களும் இடம் பெற்றிருக்கின்றன. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் தமிழில் கிடைக்கின்றன.
இப்படி இருக்கையில் சமஸ்கிருதம் தொடர்பான அறிவு தேவை என்று கேட்டிருப்பது பொருத்தமற்றதாக இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














Click it and Unblock the Notifications