"வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றம் வேண்டாம்!" நீங்கள் செய்ய வேண்டியது என்ன? முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 23) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் நிலையில், ஒருவேளை நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்ற பிறகு உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றால் பதற்றப்பட வேண்டாம். அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை நான்கு முனை போட்டி இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது.

தமிழ்நாடு தேர்தல்
இன்றைய தினம் பொதுமக்கள் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே வாக்களிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். வேலைக்காக வெளியூர்களில் இருப்போர் கூட வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
அப்படி ஆர்வமாக வாக்களிக்கச் செல்லும்போது, ஒருவேளை நீங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்ற பிறகு உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றால் பதற்றப்பட வேண்டாம். அப்போது நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் இதோ:
முதலில் சரிபார்க்கவும்
வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன் அல்லது அங்குச் சென்ற பிறகு பெயர் இல்லை எனத் தெரியவந்தால், உடனே Voter Helpline App அல்லது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://voters.eci.gov.in/) உங்கள் EPIC எண்ணைக் கொண்டு தேடவும். EPIC நம்பர் என்றால் வாக்காளர் அடையாள அட்டை. அதை வைத்துத் தேடவும்.. சில நேரங்களில் உங்கள் வார்டு அல்லது வாக்குச் சாவடி எண் மாறியிருக்கலாம். ஒருவேளை மாறி இருந்தால் அங்குச் சென்று வாக்களிக்கவும்.
அடுத்து என்ன!
பட்டியலில் பெயர் இல்லை என்றால் வாக்களிக்க முடியுமா? என்று கேட்டால்.. துரதிர்ஷ்டவசமாக முடியாது என்பதே பதிலாகும். வாக்காளர் அடையாள அட்டை கையில் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். பட்டியலில் பெயர் இல்லையெனில், இன்றைய தினம் உங்களை வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள்.
பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும். ஒருவேளை பூத் சிலிப் வந்துவிட்டது ஆனாலும், வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் அப்போதும் வாக்களிக்க அனுமதிக்க மாட்டார்கள். பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே பூத் சிலிப் வழங்கப்படும் என்பதால் இதற்கான வாய்ப்பு குறைவு!
'ASD' பட்டியலில் பெயர் இருக்கிறதா?
அதேபோல அங்குள்ள BLO எனப்படும் வாக்குச் சாவடி அதிகாரியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.. ஒருவேளை நீங்கள் நீண்ட நாட்களாக அதே பகுதியில் வசிப்பவர் என்றால், உங்கள் பெயர் ASD (Absent, Shifted, Dead) பட்டியலில் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அவரிடம் கேட்கவும். அப்படி இருந்தால், உங்களின் அடையாளச் சான்றைக் காட்டி, உரிய உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு நீங்கள் வாக்களிக்க வாய்ப்புண்டு. இருப்பினும், நிச்சயம் வாக்களிக்க அனுமதி கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
என்ன செய்ய வேண்டும்?
இந்த கடைசி நேரக் குழப்பங்களையும் ஏமாற்றங்களையும் தவிர்க்கவே தேர்தல் ஆணையம் பல முறை வாக்காளர் பட்டியல் வெளியாகும்போதே உங்கள் பெயரை செக் செய்து கொள்ளும்படி வலியுறுத்துகிறது. அப்போதே செக் செய்து பெயர் மிஸ் ஆகியிருந்தால் பெயரைச் சேர்த்துக் கொள்ள முடியும். அப்போது இந்த பதற்றமும் தலைவலியும், குழப்பமும் இருக்காது.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் என்றால் அது பிரச்சினை இல்லை.. பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்த பிறகு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக், பென்ஷன் ஆவணங்கள் ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.!
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதி உண்டு.












Click it and Unblock the Notifications