தமிழகத்தில் இன்று எக்ஸிட் போல் வராது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நிறுத்தம் ஏன்?
சென்னை: ஒவ்வொரு சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் மாலை 6 மணிக்கு முடிவடைந்தால் அதன்பிறகு 30 நிமிடம் கழித்து எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு(Exit Poll) முடிவுகள் வெளியாகும். தேர்தலில் ஓட்டளித்த மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த ரிசல்ட் இருக்கும் என்பதால் பலரும் அதனை காண ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தான் இன்று தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவராது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தை தொட்டுள்ளது.

இதனால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் புதிய ரெக்கார்ட் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை விஜயின் அரசியல் வருகை தமிழக தேர்தலை இன்னும் விறுவிறுப்பாக்கி உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனை போட்டி உள்ளது.
இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது தமிழக மக்கள் அனைவரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான 'எக்ஸிட் போல்' முடிவுக்காக காத்துள்ளனர். அதாவது ஒரு மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தால் அதன்பிறகு 'எக்ஸிட் போல்' (Exit Poll) எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவரும். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் என்பது தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த மக்களிடம் நேரடியாக கேட்கப்பட்டவையாக இருக்கும். இதனால் இந்த எக்ஸிட் போல் ரிசல்ட்டுக்கு மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
அந்த வகையில் இன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகும் கூட எக்ஸிட் போல் வெளியாகும் என்று பலரும் ஆர்வமாக காத்துள்ளனர். ஆனால் அதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால் இன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு எக்ஸிட் போல் ரிசல்ட் வெளிவராது. ஏனென்றால் தற்போது புதுச்சேரி, கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் என 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு சேர்த்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 5 மாநில தேர்தல்கள் முழுவதுமாக முடிவடைந்தால் மட்டுமே 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட முடியும்.
தற்போது புதுச்சேரி, கேரளா, அசாமில் முழுமையாக தேர்தல் முடிவடைந்துவிட்டது. அதேபோல் தமிழகத்திலும் இன்று சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். அதேவேளையில் மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கும். அதன்பிறகு 142 தொகுதிகளுக்கு வரும் 29 ம் தேதி தான் தேர்தல் நடக்கும். இதனால் அந்த தேர்தல் முடிவடைந்த பிறகு தான் எக்ஸிட் போல் வெளியாகும்.
அதன்படி இன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்தாலும் எக்ஸிட் போல் முடிவுகள் வராது. மாறாக ஏப்ரல் 29 ம் தேதி மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு தான் மாலை 6.30 மணிக்கு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகும். தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கான 'எக்ஸிட் போல்' தேர்தல் முடிவுகளும் அன்றைய தினம் வெளியாகும் என்பது குறிப்பிடத்க்கது.












Click it and Unblock the Notifications