கேளம்பாக்கமா.. கிளாம்பாக்கமா..சட்டசபையில் செல்லூர் ராஜூ கன்பியூஸ்.. அண்ணனை பார்த்தாலே மகிழ்ச்சிதான்
சென்னை: கேளம்பாக்கம் பேருந்து நிலையமா? கிளாம்பாக்கம் பேருந்து நிலையமா என்பதில் குழம்பித்தான் போனார் முன்னார் அமைச்சர் செல்லூர் ராஜூ. சட்டசபையில் குழப்பத்தில் பேசிய செல்லூர் ராஜூவைப் பார்த்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், உங்கள் மகிழ்ச்சி.. எங்கள் மகிழ்ச்சி.. அங்கே குழப்பம் இல்லை..உங்களுக்கு தான் குழப்பம் இருக்கிறது என்று சொன்ன உடன் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டசபையில் சில நேரங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும்.. எதிர்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கும்.. குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர்கள்.. முதல்வர் விளக்கம் தருவார்கள். சில நேரங்களில் நகைச்சுவை காட்சிகள் அரங்கேறும்.

ஆளுநர் உரை புறக்கணிப்பினால் சட்டசபையில் அனல் பறந்த நேரத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை சட்டபையில் கேள்வி நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ, புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து தென் மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாவது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் கிளாம்பாக்கம் என்று கூறுவதற்கு பதிலாக கேளம்பாக்கம் என கூறியுள்ளார். அருகில் இருந்த உறுப்பினர்கள் இதனை கவனித்து அண்ணே அது கிளாம்பாக்கம் என கூறினர். ஆனால் செல்லூர் ராஜூ அதனை கவனிக்காமல் தொடர்ந்து பேசினார். போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஒரு கேள்வி.. தென் மாவட்ட மக்களுக்காக கேளம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து விட்டீர்கள்.. சும்மா விட் அடிக்கக்கூடாது என்று சொன்ன செல்லூர் ராஜூ.. அங்க மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க என்றார்.
அங்க இருந்து டவுனுக்கு உள்ளே வருவதற்கு அதாவது சென்னை மாநகரத்திற்குள் வருவதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு போக்குவரத்துறை அமைச்சர் பதில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.
இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், செல்லூர் ராஜூ அண்ணன் அவர்களுக்கு முதலில் என் நன்றி.. தை முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டு வாழ்த்து சொன்னார். மிக்க நன்றி
அடுத்ததாக என்னைப்பார்த்து விட் அடிக்கக்கூடாது என்று சொன்னார். அண்ணனை பார்த்தாலே எல்லாருக்கும் மகிழ்ச்சி. அவர் எழுந்து நின்றாலே ஆனந்தமாக சிரிப்பு வரும்.. உங்கள் மகிழ்ச்சி. எங்கள் மகிழ்ச்சி என்று சொன்னார் அமைச்சர்.
அண்ணே, அது கேளம்பாக்கம் இல்ல, கிளாம்பாக்கம் என முதல்ல கிளியர் வரணும்.. அந்த குழப்பம் உங்களுக்கே இருக்கு என்று கூறினார். முதலில் இந்த தெளிவு வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்பதற்காக கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சியில்தான்.
அதிமுகவைப் போல முந்தைய ஆட்சியின் திட்டங்களை அப்படியே கிடப்பில் போடவில்லை. அதிமுக 30 சதவிகிதத்தில் விட்டுச் சென்ற கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்றியபோது, கோயம்பேட்டில் தண்ணீர் இல்லை, வசதிகள் சரியில்லை என்றெல்லாம் பிரச்னைகள் எழுந்தன. இது நடந்தது அதிமுக ஆட்சியில்தான்.
ஆக, ஒரு மாற்றம் வரும்போது அதனை ஏற்றுக்கொள்வதில் சில தயக்கங்கள் மக்களுக்கு வருவது இயல்புதான். ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு அங்கு பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் இதுகுறித்து பிரச்னை எழுப்பவில்லை. பேருந்தில் பயணிக்காத செல்லூர் ராஜூ போன்றவர்கள் தான் இதனை பிரச்னையாக பேசுகிறார்கள்.
மக்கள் தொகை அதிகரிப்பதால் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இயங்கினால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதால் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கே குழப்பம் இல்லை... உங்களுக்கு தான் குழப்பம் இருக்கிறது. வேண்டுமானால் வாருங்கள், உங்களை அழைத்து செல்கிறேன் என்று சிவசங்கர் பேசிய போது அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications