தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 : ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா?
தமிழ்நாடு பட்ஜெட்டில் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறுமா? என்பது அரசு ஊழியர் எதிர்பார்ப்பு.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24 (பட்ஜெட் 2023-24) நாளை தாக்கல் செய்யப்படுகிறது. தங்களது நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு இடம் பெறுமா? என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் நாளை பல்வேறு மிக முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்பது எதிர்பார்ப்பு.

ஆளும் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதிகளில் எதிர்பார்ப்புடன் இருப்பது மாதந்தோறும் பெண்களுக்கான ரூ1,000 உதவித் தொகை வழங்குவது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆகையால் பெண்களுக்கான ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு எதிர்ப்பார்ப்புகளில் முதன்மையானதாக உள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவது குறித்த
அறிவிப்புக்கும் சாத்தியம் இருக்கிறது என கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் தங்களது பல்வேறு கோரிக்கைகள் எப்படியும் நிறைவேற்றப்படும் என்கிற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் அரசு ஊழியர்கள். இதனை ஏற்று திமுக ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது.
தங்களது இந்த அதிருப்தியைப் போக்கும் வகையில் நாளைய பட்ஜெட் தாக்கலின் போது புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும்- பழைய ஓய்வூதிய திட்டமே அமலில் இருக்கும் என்ற அறிவிப்பு இடம்பெறக் கூடும் என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.
அதேபோல காலி பணி இடங்கள் நிரப்புதல், தொகுப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப் பணியாளகளாக்குதல், சாலைப் பணியாளர்கள் கோரிக்கை ஆகியவற்றையும் திமுக அரசு நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்பதும் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications