பரபர சூழலில் வரும் 31 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.. ஆலோசிக்க போவது என்ன?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 31 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கள் அவ்வப்போது ஆளும் திமுக அரசை சீண்டும் வகையில் இருப்பதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டுகிறது. அவ்வப்போது ஆளுநரின் பேச்சுக்கு காட்டமாகவும் திமுக பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் சரியாக போற்றப்படவில்லை என்றும் ஆரியர், திராவிடர் என எதுவும் கிடையாது என பேசியிருந்தார்.
இதற்கு திமுக மிகக் காட்டமாக விமர்சித்தது. இது தொடர்பான காரசார கருத்து மோதல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், ஆளுநர் மாளிகை வாசல் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக இந்த விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் 31 ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications