Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 கோடி வெள்ள நிவாரணம்.. கடன் உதவி முதல் காப்பீடு வரை.. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு, சிறு நிறுவனங்களுக்கு கடனுதவி, புதிய வீடு கட்ட உதவி, பயிர் சேதங்களுக்கு நிவாரணம், கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு போன்ற பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: , "கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அன்றைய தினமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

 Tamil Nadu CM MK Stalin announces flood relief package of Rs.1000 crore for southern districts

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:

சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவது என அரசு முடிவெடுத்துள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.250 கோடி: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும், இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.

சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம்: இந்த பெருமழையின் காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய இந்த கடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 இலட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரையில் வெளியிடப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கடனுதவி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) மூலம் "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்" என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரை, ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3,300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழு கடன்: இந்த இயற்கைப் பேரிடரினால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நிலையைக் கருத்திற்கொண்டு புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் நிவாரணக் கடன் தவணை மற்றும் வட்டியைத் திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்துத்தரப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வியாபாரம் / குறு சிறு தொழில் புரியவும், ஏற்கெனவே உள்ள பொருளாதாரச் சொத்தை சரி செய்யவும் / அல்லது புதிய சொத்தை உருவாக்கவும், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு இந்தத் தருணத்தில் கடன் உதவி மிகவும் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு: பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.
சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்: பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.

புதிய கால்நடைகளை வாங்கிட கடன் உதவி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 இலட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசிதியாக ரூ.1.50 இலட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.3000 உதவித் தொகை: பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3000 வழங்கப்படும்.

கல்வி சான்றிதழ்கள்: பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல்: வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்களின் பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்குப் புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகங்கள்: அதேபோல், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாடப் புத்தகங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

அரசுத் துறை சான்றிதழ்கள்: வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் அல்லது ஆவணங்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வரும் திங்கள் கிழமை தோறும் துவங்கப்படும்.

வாகனங்களுக்கான காப்பீடு: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன." இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+