இதுவரை பாஜக... இனிமேல் ஆர்.எஸ்.எஸ்- டெல்லி சமூக நீதி மாநாட்டில் விளாசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
சென்னை: இன்றைக்கு இடஒதுக்கீடு குறித்து அக்கறையோடு பேசுகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கொண்டு வந்த விபி சிங் ஆட்சியை கவிழ்த்த பாஜகவின் பின்னால் இருந்து இயக்கியது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
டெல்லியில் நடைபெற்ற திமுகவின் சமூக நீதிக் கூட்டமைப்பின் 2-வது மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பின் இரண்டாவது மாநாட்டில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஏப்ரல் 3-ஆம் நாள் நடைபெற்ற முதல் மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநாட்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன். சமூகநீதி பேசும் இடத்தில் நிச்சயமாக நான் இருப்பேன் என்ற அடிப்படையில் நான் பங்கெடுத்து உரையாற்றுகிறேன்.

இணையற்ற இந்தியா: சமூக நீதி - Social Justice, மதச்சார்பற்ற அரசியல் Secular Politics, சமதர்மம் - Socialism, சமத்துவம் - Equality, மாநில சுயாட்சி - State Autonomy, கூட்டாட்சிக் கருத்தியல் - Federalism - இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா என்பதால், இத்தகைய கருத்தியல்களை முன்னெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் அகில இந்திய அளவில் சில கூட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதில் மிகமிக முக்கியமானது இந்த சமூகநீதி கூட்டமைப்பு!
நீதிக்கட்சி: திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சமூகநீதியைத்தான் இயக்கத்தின் இலக்கணமாக வைத்துள்ளது. இந்த இயக்கம் உருவாகக் காரணமே சமூகநீதிதான். சமூகநீதி - சமதர்ம சமுதாயத்தை அமைப்பதற்காகவே திராவிட இயக்கம் தோன்றியது. 1916-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது சமூகநீதியை உருவாக்கவே தொடங்கப்பட்டது.
1922-ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்: சென்னை மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில், 1922-ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தார். அதுதான் இன்றுவரை தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்நாட்டைப் பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியது மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்!
இந்திய அரசியல் சாசன திருத்தம்: தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் காரணமாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதன்முறையாக திருத்தப்பட்டது. "சமுதாயத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை, அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம்! இந்த திருத்தத்துக்குக் காரணம், "happenings in Madras" என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு. 'Socially and Educationally' என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை! பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க அதிகாரமளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-ஆவது பிரிவில் 'Socially and Educationally' என்பதுதான் வரையறையாக உள்ளது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை!
1973 அலகாபாத் மாநாடு: இதனைத் தொடர்ந்து அகில இந்தியாவுக்குமான சமூகநீதிக் குரலை எங்கள் கருணாநிதி எதிரொலித்தார்கள். 14.10.1973 அன்று அலகாபாத்தில் உத்தரப்பிரதேச மாநில பட்டியலின - பிற்படுத்தப்படோர் மாநாடு நடந்தது. அதில் முதலமைச்சர் கலைஞர் பங்கெடுத்து உரையாற்றினார். தனது உரையின் முடிவில் இப்படிக் குறிப்பிட்டார் கலைஞர் அவர்கள்... "பட்டியலின - பின்தங்கிக் கிடக்கின்ற சமுதாயத்திற்காக ஒன்றிய அரசினர் இரண்டு முன்னெடுப்புகளை நினைவில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ஒழுங்காக முழுமையாக நிரப்பப்பட வேண்டும். அதுபோல ஒன்றிய அரசாங்கத்தினுடைய வேலைவாய்ப்புகளில் - இனிமேல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, இவ்வளவு இடம் என்று ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதையும் ஒன்றிய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்" என்று முதலமைச்சர் கருணாநிதி உரை ஆற்றினார்கள்.
மண்டல் கமிஷன் அமைய அடிப்படை: இதை வைத்துதான் 1978-ஆம் ஆண்டு பி.பி.மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராய ஆணையம் அமைக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு பி.பி.மண்டல் அவர்கள் அறிக்கை கொடுத்தாலும் அது அமல்படுத்தப்பட வில்லை. பிரதமர் வி.பி.சிங் அவர்கள் 1990-ஆம் ஆண்டு மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த அழுத்தம் கொடுத்தவரும் கருணாநிதி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்காக தீர்மானமே நிறைவேற்றி வலியுறுத்தினார்.
இடஒதுக்கீடு- ஆட்சியை கவிழ்த்த பாஜக: பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு, ஒன்றிய அரசு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி அளித்த அந்த காரணத்திற்காகவே, அன்றைய தினம் வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை பா.ஜ.க. கவிழ்த்தது என்பதையும் உங்களுக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படி தொடர்ச்சியாக சமூகநீதியை நிலைநாட்ட நாம் போராடி வந்தாலும் - சமூகநீதிக்கான தடைகளும் விழவே செய்கின்றன.
பாஜக முட்டுக்கட்டை: இதில் பா.ஜ.க. பெரிய அளவிலான தடுப்புச் செயல்களை செய்து வருகிறது. சமூகநீதியை முறையாக பா.ஜ.க. அமல்படுத்துவது இல்லை. கடந்த 9 ஆண்டுகாலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். மீது தாக்கு: திடீரென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டியது, பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த போது, இதே ஆர்.எஸ்.எஸ் எங்கே போயிருந்தது? அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்.தானே? எனவே, நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதால் விளிம்புநிலை மக்களை ஏமாற்றுவதற்கு இப்போது மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர, உள்ளார்ந்த ஈடுபாடு காரணமாக அவர் சொல்லவில்லை.
27% இடஒதுக்கீடு முழுமையாக செயல்படுமா?: பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், 9 ஆண்டுகால ஆட்சியில், ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏன், ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் சமூகநீதி அடிப்படையில் அவர்கள் நிரப்ப வேண்டும். அதனைச் செய்வார்களா? சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை அல்ல. அனைத்து மாநிலங்களின் பிரச்சினை. குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும்போது இது அகில இந்தியாவிற்கும் பொதுவான பிரச்சினை.
சமூக நீதி என்பது என்ன?: ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறு விழுக்காடாக இருந்தாலும், பிரச்சினை ஒன்றுதான். அதுதான் புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை - அடிமைத்தனம் - அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
திமுக ஆட்சி செய்தது என்ன?: பட்டியலின - பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும். வழிகாட்டும். செயல்படுத்தும். இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படா விட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும். இதுபோல அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அகில இந்திய அளவில் இந்தக் குழு நிச்சயம் அமைக்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு அதிகாரம்: இந்தக் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இவை அனைத்தையும் செயல்படுத்திக் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக, மிக முக்கியமாக இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநிலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. சில மாநிலங்களில் 50 விழுக்காடு உள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். எனவே, 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு அளவீடு போகக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல. "இடஒதுக்கீடு" மாநிலங்களின் உரிமை என்று அதிகாரத்தை மாற்றி வழங்கினால்தான், அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு உரிய இடஒதுக்கீட்டினை வழங்க முடியும். இந்தியாவில் உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் மலர்ந்தாக வேண்டும். நாம் மேற்கண்ட "சமூகநீதி" தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க உழைப்போம். இந்திய நாட்டு மக்கள் அனைவரும் சமூகநீதிப் பெருவாழ்வு வாழப் பாடுபடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
-
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
“ரஜினியை மிரட்ட முடியாது.. யாருக்கும் அடிபணிய மாட்டார்” - தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக பதிலடி! -
6க்கு கீழ் குறைய கூடாது.. 5க்கு மேல் கொடுக்க முடியாது.. சிபிஎம், சிபிஐ-யிடம் கறார் காட்டும் திமுக! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது!












Click it and Unblock the Notifications