3 மாநில தேர்தல் தோல்வி ஏன்? "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பகிரங்கப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "இந்தியா" கூட்டணியின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் நாளை மறுநாள் (டிச.19) பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் 3 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது ஏன்? இந்தியா கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏன் என்பது குறித்து விரிவாக பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெற்றன. இதில் சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தல் காலத்தில் "இந்தியா" கூட்டணி மறக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்தியா கூட்டணி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி குறித்து 'தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டி குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம் என கூறியிருந்தார்.
3 மாநில தேர்தல் தோல்வி என்பது "இந்தியா" கூட்டணியின் தேவையை வலியுறுத்துகிறது. "இந்தியா" கூட்டணியின் ஒற்றுமையால்தான் தேர்தல் வெற்றியும் சாத்தியமாகும் என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதையே டெல்லியில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications