"let's, wait and see".. திருப்பதியில் பவன் கல்யாண் vs சென்னையில் உதயநிதி.. ஒரே வரியில் பதிலடி
சென்னை: திருப்பதி பெருமாள் முன்னிலையில் சொல்கிறேன், சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவர்” என்று நேற்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மறைமுகமாக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சாடியிருந்தார்.
இந்நிலையில் பவன் கல்யாண் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொறுத்திருந்து பார்க்கலாம் ( let's, wait and see) என்று கூறினார்.
திருப்பதி லட்டு விவகார சர்ச்சையில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக முதல்முறையாக பவன் கல்யாண் வெளியிட்ட பதிவில், "இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை நாம் உடனடியாக துவங்க வேண்டும். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இரண்டாவது முறையாக வெளியிட்ட பதிவில், "நம்முடைய கலாச்சாரம், நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் பக்தி ஆகியவற்றின் மையமான ஸ்ரீ திருப்பதி பாலாஜி தாமின் பிரசாதத்தில் அசுத்தத்தை புகுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தீய முயற்சிகளால் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதென்றால், நான் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன். வெங்கடேஸ்வரப் பெருமாள் கடவுளின் அருளால் நமக்கும், சனாதனிகள் அனைவருக்கும் இந்த துக்கமான தருணத்தில் நல்ல மன வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இப்பொழுதே இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, பதினோரு நாட்கள் நோன்பு நோற்பதாக சபதம் எடுத்து வருகிறேன். பதினோரு நாள் பரிகார தீட்சையின் பிற்பகுதியில் அக்டோபர் 1, 2 தேதிகளில் திருப்பதி சென்று இறைவனை நேரில் தரிசனம் செய்து பாவமன்னிப்புக் கோரி இறைவன் முன் எனது பரிகார தீட்சை நிறைவு செய்ய போகிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக, பவன் கல்யாண் கூறியபடியே 11 நாள் விரதத்தை நேற்று நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பதி திருமலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போத பவன் கல்யாண் பேசுகையில், “நான் ஒரு சனாதன இந்து என்று பெருமையாக கூறிக் கொள்கின்றேன். சனாதன தர்மம் மீது எனக்கு அதிக அக்கறை உண்டு. இங்கு தமிழர்கள் அதிகம் பேர் இருப்பதால், தமிழிலேயே நான் பேச விரும்புகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர் ஒருவர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் என்றும், அதனை கூண்டோடு அழித்திட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். இப்படி அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி பேச அவரால் முடியுமா? உங்களால் அழிக்க முடியாது.. நீங்கள் தான் அழிந்து போவீர்கள்” என பேசியிருந்தார்.
#WATCH | On Andhra Pradesh Deputy CM Pawan Kalyan's remark 'Sanatana Dharma cannot be wiped out and who said those would be wiped out', Tamil Nadu Deputy CM Udhayanidhi Stalin says "Let's wait and see" pic.twitter.com/YUKtOJRnp9
— ANI (@ANI) October 4, 2024
இந்த நிலையில், இன்று பவன் கல்யாண் பேட்டி குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஓகே, “Let's wait and see” என பதிலளித்தார். அதாவது பொறுந்திருந்து பார்க்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். இதுபற்றி பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றைப் போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் என நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தது. மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications