இந்திய அரசியலின் சகாப்தம்.. தமிழக அரசியலின் பிதாமகன்.. மு.கருணாநிதியின் வியத்தகு சாதனைகள்!
சென்னை: இந்திய அரசியல் உலகின் மாபெரும் சகாப்தம்.. 5 முறை தமிழ்நாடு முதல்வர்.. தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாதவராக வலம் வந்தவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதி!
2018ல் இயற்கை எய்திய கலைஞர் என்னும் கருணாநிதி.. இந்திய அரசியலில் நிகழ்த்தாத சாதனைகளும், மாற்றங்களும் கிடையாது!
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மொத்த தேசமும் இந்து - முஸ்லீம் பிரிவினைத் தொடங்கி, வறுமை வரை பல்வேறு பிரச்சனைகளில் சிக்குண்டுத் தவித்து வந்தது. ஆனால் ஒரு மாநிலம் மட்டும் தனது எதிர்காலத்திற்கான விதையை ஆழமாகத் தூவிக்கொண்டு இருந்தது.

அந்த மாநிலம் தமிழ்நாடு! விதை போட்டது திராவிட இயக்கம்!
ஆம். மொத்த தேசமும் எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் சிக்குண்டு இருந்தபோது தமிழ்நாடு மட்டும் தனி அரசியல் பாதையை வகுத்து, மாநில சுயாட்சி - மொழி உரிமை - சம உரிமை - பெண் உரிமையை முன்னிறுத்தி வீறுகொண்டு நடைபோட்டது.
திராவிட இயக்கத்தில் தந்தை பெரியாரின் தளபதியாக.. பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக.. போர் வாளாக இருந்தவர் கருணாநிதி..! அவரின் வியத்தகு சாதனைகளும், வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?

திருக்குவளையில் உதித்த சூரியன்!
1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, இந்திய அரசியலில் காணாத உயரங்களும்.. செய்யாத சாதனைகளும் இல்லை! இளம் வயதில் இருந்தே தமிழ் மீது தீராத பற்றும், காதலும் கொண்டிருந்த கருணாநிதி, பள்ளி காலத்திலேயே நாடகம்.. கதை.. கவிதை.. இலக்கியம் என்று பல துறைகளில் சிறந்து விளங்கினார். தன்னுடைய எதிர்காலத்தையும் அதற்கு ஏற்றபடியே கருணாநிதி அமைத்துக்கொண்டார்.
இளைஞர்களுடன் சேர்ந்து செயல்படுவது, மொழிக்காக போராடுவது, நலத்திட்ட உதவிகளை செய்வது என்று சிறுவயதில் இருந்தே இவர் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்தார். தன்னுடைய ஊரை சுற்றியுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து 20 வயதிலேயே 'தமிழ் மாணவர் மன்றம்' எனும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைத் தொடங்கி, நடத்தியவர் கருணாநிதி. தமிழ்மொழி தொடர்பாக தொண்டு செய்தல், உள்ளூரில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுதல் என்று பதின்ம வயதில் இருந்தே இவர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார்.
தமிழ் எழுத்துறை மீதும், மேடைப் பேச்சு மீதும், தீராத காதல் கொண்ட கருணாநிதி.. ஊர் ஊராக, மேடை மேடையாக தமிழ் மாணவர் மன்றம் எனும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு வாயிலாகப் பேசி வந்தார். அதோடு 'மாணவ நேசன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் வெளியிட்டார். பெரியாரின் கொள்கையால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட கருணாநிதி, பின்னர் பெரியாரின் குடி அரசு இதழிலும் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி தலைவராக நடத்தி வந்த தமிழ் மாணவர் மன்றம் என்ற இளைஞர் மறுமலர்ச்சி அமைப்புதான் பின்னர் "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது.

மொழியும் எழுத்தும் கருணாநிதியும்!
அதுவே, திமுகவின் இளைஞர் அணியாகவும் பின்னர் மாறியது வரலாறு! இவர் நடத்தி வந்த மாணவ நேசன் பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில், முரசொலி என்ற பெயரில் அதைத் துண்டு இதழாக 1942ல் இருந்து வெளியிட தொடங்கினார். இதுவே, தற்போது திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ். பதின்ம வயதில் இருந்தே நீதிக்கட்சி கூட்டங்களிலும், பின்னர் பெரியாரின் திராவிடர் கழகக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, பல மேடைகளில் பேசத் தொடங்கினார். திகவில் அப்போது இருந்த பெரிய பேச்சாளர்கள் பலரின் பேச்சைக் கேட்க மக்கள் பலர் காத்திருந்த காலம். அப்படிப்பட்ட பேச்சாளர்களுக்கு இடையிலும் கருணாநிதி தனித்துத் தெரிந்தார்! இவரின் பேச்சைக் கேட்கத் தனித்தனியாக வந்த பலர் கூட்டமாக சேர்ந்தது வரலாறு!
தொடர்ச்சியாகப் பல மேடைகளில் பேசிய கருணாநிதி, 1949ல் திராவிட முன்னேற்ற கழகம் அதிகாரப்பூர்வமாக அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட போது, அண்ணாவின் தம்பியாக அதில் இணைந்து கொண்டார். ஒருபக்கம் அரசியல் மேடைகளில் அனல் பறக்கப் பேசினாலும், இன்னொரு பக்கம் நாடக மேடைகளில் முற்போக்குக் கருத்துக்களை பரப்பி மக்களை சிந்திக்க வைத்தார்.

கோலிவுட்டில் கோலோச்சிய “கோ”!
திராவிட இயக்கக் கொள்கைகள் அப்போது தமிழ்நாட்டில் மேடைப் பேச்சுக்கள் மூலமும், சினிமாக்கள் மூலமும் பெரிய அளவில் பரவியது. இந்த இரண்டிலும் அப்போது கொடிக்கட்டிப் பறந்தவர் கருணாநிதிதான்!
"கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது" என்று பராசக்தி திரைபடத்தில் அவர் எழுதிய எழுத்துக்கள் இப்போதும் தமிழ்நாடு அரசியலுக்குப் பொருந்தக்கூடிய பொன்னான எழுத்துக்கள். 1944ல் ஜூபிடர் பிலிம்சில் கதை ஆசிரியராக சேர்ந்தார். இவரின் கதையில் வெளியான முதல் படமான ராஜகுமாரி தமிழ்நாடு முழுக்கக் கவனம் பெற்றது. அதன்பின் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 20க்கும் மேற்பட்ட நாடகங்ககள், 29 கட்டுரைகள், 4 இலக்கிய மறுபடைப்புகள், 39 சிறுகதைகளின் பட்டியல், 14 சிறுகதைத் தொகுதிகள், 10 புதினங்கள், 4 வரலாற்றுப் புனைவுகள் என்று இலக்கியத் துறைக்கும், கலைத்துறைக்கும் இவர் ஆற்றிய பங்கு மிகப்பெரியது.
அரசியல் மேடைப்பேச்சு, இலக்கியம், கலை என்று தீவிரமாக வலம் வந்த கருணாநிதியின் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது இரண்டு பெரிய போராட்டங்கள்தான்..

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே!
ஒன்று கல்லக்குடி போராட்டம். கல்லக்குடியில் இருந்த டால்மியா சிமெண்ட் ஆலைக்காக அந்த ஊரின் பெயரை டால்மியாபுரம் என்று பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் திமுக பெரும் போராட்டத்தை நடத்தியது. ரயில் நிலையத்தில் இருந்த டால்மியாபுரம் எனும் பெயர் எழுதப்பட்ட பலகைகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்ட கருணாநிதி 6 மாதம் சிறையில் இருந்தார். இந்தப் போராட்டம் காரணமாகவே இப்போது கருணாநிதி 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்றுப் போற்றப்படுகிறார்! இந்தப் போராட்டம் அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது.

மொழி எங்கள் உயிருக்கு நேர்!
கருணாநிதி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய இன்னொரு போராட்டம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம். 1957ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டம் இது. இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு முழுக்க திமுக போராட்டம் நடத்தியது. அதில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி. இந்த மொழிப்போராட்டம் வெற்றிபெற்றதால் இந்தியை தேசிய மொழியாக்கும் முடிவை அப்போதைய காங்கிரஸ் அரசு கைவிட்டது. எல்லா மாநிலங்களும் ஏற்கும் வரை இந்தி, ஆங்கிலத்தோடு சேர்ந்து அலுவல் மொழியாக மட்டுமே நீடிக்கும் என்று காங்கிரஸ் அறிவித்தது.
அப்போது, இந்திக்கு எதிராக திமுக தொடங்கி வைத்தத் தீ இப்போதும் அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியை எதிர்க்கவும் திமுக தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டமே காரணமாக அமைந்தது!

மு. கருணாநிதி என்னும் நான்.. தமிழ்நாடு முதல்வராக…!
தொடர்ந்து அரசியலில் போராட்டங்கள் மூலமும், பேச்சுக்கள் மூலமும் கவனம் பெற்ற கருணாநிதி, 1957ல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே குளித்தலையில் இருந்து எம்.எல்.ஏ., வாக தேர்வானார். அதன்பின், 1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1967ல் திமுக ஆட்சிக்கு வந்து அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவால் 1969ல் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1957ல் எம்.எல்.ஏ., ஆன கருணாநிதி, அதன்பின் ஒரு எம்.எல்.ஏ., தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை. இந்தியாவில் இந்தச் சாதனையை எந்த அரசியல் தலைவரும் படைத்ததே இல்லை!
1969-ஆம் ஆண்டில் அண்ணாவின் மறைவால் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதன்பின் 2018ல் தனது மறைவு வரையிலும் கட்சியின் தலைவராக நீடித்தார்.
5 முறை தமிழ்நாடு முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படைத்தது பல வியத்தகு சாதனைகள்! அவரின் சாதனைகளை ஒரே ஒரு கட்டுரையில் பட்டியலிட முடியாது. இருந்தாலும் உலகமே திரும்பிப் பார்த்த அவரின் சாதனைகளில் சில பின்வருமாறு!

எண்ணிலடங்கா சாதனைகள்!
மாநில உரிமை: சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் மாநில ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றும் உரிமையுடையவர்களாக இருந்தனர். தேசிய அளவில், சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றும் உரிமையுடையவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தலைமை வகிக்கும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர் கருணாநிதி. இதனால், 1972ஆம் ஆண்டு சுதந்திர நாள் வெள்ளிவிழாவையொட்டி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள், தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
பெண் உரிமை: 1989இல் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிற்கே இந்தத் திட்டம் முன்னோடியாக இருந்தது.
அமைச்சரவை: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்பு சட்டம், விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம், உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்பு திருமணம் செய்த தம்பதியருக்கு ஊக்கத்தொகை என்று பல திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதிதான்.
இடஒதுக்கீடு: ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகளை பெற்று உயர்வதற்காக, தமிழகத்தில் நிலவி வந்த இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30%, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, பழங்குடியினருக்கு 1% என 69% இடஒதுக்கீடு 1989 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்போதும் இந்தியாவில் அதிகபட்ச இடஒதுக்கீட்டு உரிமை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான்.

சென்னை ஆனது மெட்ராஸ்!
கைரிக்ஷா: மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால், கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் கை ரிக்ஷா உள்ளபோது, 1969லேயே அதை இந்த மாநிலத்தில் ஒழித்தவர் கருணாநிதி.
சென்னை: ஆங்கிலத்திலும் ஏனைய அன்னிய மொழிகளிலும் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கும்படி பெயர் மாற்றம் செய்தவர் கருணாநிதி.
குடிசை மாற்று வாரியம்: இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்த தமிழகத் திட்டங்களில் இதுவும் ஒன்று. குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கருணாநிதி தொடங்கினார். இதன்மூலம், பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் முன்னோடித் திட்டம்தான்.

எல்லோரும் சமம் - கருணாநிதியின் முன்னோடி திட்டம்!
மின்சாரம்: சிறு மற்றும் குறு விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 1989ல் நடைமுறைக்கு வந்தது. தேசத்திற்கே இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு திட்டமாக அமைந்தது.
வேளாண் பல்கலைக்கழகம்: அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கும் கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காக இரவலர் இல்லங்கள் அமைத்தும், இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகத்தை அமைத்தும் சாதனைப் படைத்தவர் கருணாநிதி.
சமத்துவபுரம்: தமிழர்கள் என்ற உணர்வை மறந்து சாதிவாரியாக மக்கள் பிரிந்திருப்பதை போக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுரக் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்
டன.

பெண்கள் போராட்டம், பெண்களை போற்றும் திட்டங்கள்
மகளிர் சுயஉதவிக்குழு: 1989ம் ஆண்டு தர்மபுரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதன்முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டன. பெண்கள் ஒருங்கிணைந்து சுயதொழில் வாய்ப்பைப் பெருக்கும் இத்திட்டம் இன்று மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி கண்டு, பெண்களை பொருளாதாரத் தற்சார்பு கொண்டவர்களாக மாற்றியுள்ளது.
கடன் தள்ளுபடி: 2006 மே 13ஆம் நாள் முதல்வராக பதவியேற்ற போதே தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றக் கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார்.
திருமண நிதியுதவி: சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு ஆகியவை முதல் 2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களாகும்.

கவனம் ஈர்த்த “கலைஞர் டிவி”
எரிவாயு - இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என ஐ.நா.மன்றம் வழிகாட்டியிருப்பதை, இந்தியாவிலேயே முதன்முறையாகச் செயல்படுத்தியிருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
இலவச வண்ணத் தொலைக்காட்சி: அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் முதல் 1 கிலோ அரிசி 1ரூபாய் என்ற விலையில், மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இதன்மூலமாக, பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
உழவர் சந்தை: விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை இடைத்தரகர்கள் இடையூறு இல்லாமல் தாங்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன்பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார் கருணாநிதி.
இலவச பஸ் பாஸ்: பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்தான் முதல்முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பேருந்து: குக்கிராம மக்கள் சுற்றியுள்ள நகரப் பகுதிகளை எளிதில் அடைவதற்கு வசதியாக தனியார் மூலம் சிற்றுந்துகள் / மினி பஸ்கள் இயக்கும் திட்டத்தை திமுக அரசு நடைமுறைப்படுத்தியது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டாலும்.. இன்னும் அவர் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக, சிம்மசொப்பனமாக, காட் பாதராக இருந்து வருகிறார்!
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications