அனைவருக்கும் 200 யூனிட் ஃப்ரீ இல்லை! 500 யூனிட்டுக்குள் இருந்தால் மட்டுமே இலவச மின்சாரம்!
சென்னை: 500 யூனிட்டுக்கு மேல் என்றால் 100 யூனிட் இலவச திட்டம் தொடரும் என தமிழக அரசாணை வெளியாகியுள்ளது. 500 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் இலவசம் என்ற திட்டத்திற்குத்தான் விஜய் கையெழுத்திட்டிருந்தார். இது வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தமிழகத்தில் 2.30 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. அவர்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு பணி நடக்கும் நிலையில் 500 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம்.

500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட் இலவசம் என்று ஏற்கெனவே இருந்த திட்டம் தொடர்கிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வராக பதவியேற்ற விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற கோப்பில் முதல் கையெழுத்திட்ட நிலையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
விஜய்யின் 200 யூனிட் மின்சாரம் திட்டத்திற்கு அரசுக்கு கூடுதலாக 1730 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டது. ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதற்கான அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
இதுகுறித்து மின்சாரத் துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் விஜய்யுடன் ஒருமணி நேரமாக ஆலோசனை நடத்தி இந்த அரசாணையை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் இன்று பதவியேற்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், ராஜ்மோகன், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் ஆளுநர் அர்லேகருடன் முதல்வரும், அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து விஜய் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.
அதில் 2 மாதங்களுக்கு அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக சிங்க பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், தமிழகத்தில் வேரூன்றியுள்ள போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு அதிகாரங்கள் கொண்ட வேலுநாச்சியார் படை உருவாக்கம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டிருந்தார்.
பொதுவாக முதல்வராக பதவியேற்போர் தலைமைச் செயலகத்திற்கு சென்று கையெழுத்திடுவர். ஆனால் விஜய் மக்கள் முன்பே இந்த கையெழுத்தை போட்டது தொண்டர்களிடம் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
மேலும் முதல்வர் விஜய் பேசிய போது "கஜானாவை முந்தைய திமுக அரசு காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். விரைவில் நிதி நிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். எனக்கு கால அவகாசம் கொடுங்கள். இந்த ஆட்சியில் பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருமே நன்றாக இருக்கலாம்" என விஜய் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications