ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்! ரூ.2,500 கோடி முதலீடு! 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்.
சென்னை: ஓலா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி சிப்காட்டில் ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் தொடங்கியுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஓலா நிறுவனம்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும்.

3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும். இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்,முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 43 இடங்களில் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் வாயு உற்பத்தி மேற்கொண்டு வருகின்றது.

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ்
தற்போது, 150 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில், இந்நிறுவனம் நிறுவியுள்ள புதிய 200 TPD திறன்கொண்ட அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications