தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை! அக். 21ல் பள்ளி - கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (அக்டோபர் 21 - செவ்வாய்க்கிழமை )அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட்டு உள்ளது. நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதன்பிறகு திங்கட்கிழமை தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாகும்.

இதனால் சென்னை உள்பட பிற மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வருவோர் தங்களின் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு இன்று இரவே புறப்பட்டு செல்கின்றனர்.
இதற்கிடையே தான் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. துகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், ‛‛தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை, பகலை விட இரவு நேரத்தில் தான் வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வண்ண, வண்ண பட்டாசு வகைகளை வெடிப்பார்கள். அதன்பிறகு தீபாவளி அன்று இரவு பெரும்பாலான மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை அவசரம், அவசரமாக கொண்டாடிவிட்டு, திரும்பவும் தாங்கள் படிக்கும் அல்லது பணிபுரியும் பள்ளிகள் சார்ந்த ஊருக்கு இரவோடு இரவாக பயணப்பட்டு செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் அக்டோபர் 21ம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.
அதேபோல் இன்னும் பல அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடிவிட்டு அதே நாளில் சொந்த ஊர் கிளம்பி வருவதில் சிரமம் உள்ளதை சுட்டிக்காட்டி அக்டோபர் 21ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி பொது விடுமுறையை அறிவித்துள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் இயங்காது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications