பழைய பஸ்கள்.. 15 வருட வாகனங்களை இயக்க தமிழக அரசு உத்தரவு.. பின்னாடியே வந்த அதிருப்தி குரல்.. யாரது?
சென்னை: 15 வருடம் பழைய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி தந்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. மேலும் புதிய கோரிக்கை ஒன்றும் அரசுக்கு பறந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின்படி, பொதுவாகவே 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்களின் பதிவானது ரத்து செய்யப்பட்டு, அதன் பிறகு அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது. இதன் மூலமாக மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடிகிறது.

அமுதா அதிரடி: இந்நிலையில் கடந்த வாரம், தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தார். அதன்படி, "தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 730 வாகனங்கள் 15 ஆண்டுகள் நிறைவடைந்ததாக உள்ளது. இவற்றை உடனடியாக ரத்து செய்தால் மக்களுடைய பல்வேறு பணிகளும் பாதிக்கப்படும் சூழல் நிலவும் என்று போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்திருந்தது.
15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்கள் மேலும் ஒரு வருடம் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையரகம் வேண்டுகோள் வைத்திருந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று செப்டம்பர் 30, 2024 வரை 6,341 வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மீதமுள்ள வாகனங்களின் பதிவு காலம் மிக அதிகமாக உள்ளதால் இவற்றை கழிவு செய்யலாம்" என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
விபத்துக்கள்: இந்த அறிவிப்புக்குதான் அதிருப்திகள் கிளம்பி உள்ளன.. 15 வருடங்கள் கடந்த பஸ்களை இயக்க அனுமதியளித்ததால், விபத்துக்கள்தான் தமிழகத்தில் அதிகமாகும் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து, விருதுநகரில் அண்ணா தொழிற் சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் சொன்னதாவது:
"மத்திய அரசு 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களை இயக்க அன்று தடை விதித்தபோது, "அரசின் துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்கும் வரை பழைய வாகனங்களை இயக்கி கொள்கிறோம்" என்று தமிழக அரசு அவகாசம் கேட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, மத்திய அரசின் அனுமதியை பெறாமலேயே இப்போது, தன்னிச்சையாக, 15 வருடங்களை கடந்த அரசாங்கத்தின் வாகனங்களை இயக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பழைய பஸ்கள்: தமிழகத்தில் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட வேண்டிய நிலையில், இப்போது வெறும் 18 ஆயிரம் பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இதில் 4 ஆயிரம் பஸ்கள் டிரைவர்கள், கண்டக்டர்கள், பழுது நீக்க டெக்னீசியன்கள் இல்லாததால், போக்குவரத்து பணிமனைகளில் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன..
செயல்பாட்டில் உள்ள 18 ஆயிரம் பஸ்களும் நல்ல கண்டிஷனில் கிடையாது.. வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் கூட அரசு கொள்முதல் செய்யவில்லை. அதனால், பழுதான வாகனங்களில் ஸ்பேர்பார்ட்ஸ்களை, ஒவ்வொன்றாக எடுத்து, செயல்படும் பஸ்களுக்கு ஊழியர்கள் பொருத்தி வருகின்றனர். 15 வருட பஸ்களுக்கு பெயின்ட் அடித்து பயன்படுத்துகிறார்கள். இந்த பஸ்களிலும் ஸ்பேர்பார்ட்ஸ்கள் பழையதாக இருப்பதால் சரியான நேரத்தில் செயல்படுவதில்லை....
வாணியம்பாடி: 2 நாளைக்கு முன்புகூட, வாணியம்பாடியில் பஸ் விபத்து நடந்துள்ளது.. அதனால், பழைய பஸ்களை இயக்கும் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிய பஸ்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications