சென்னையில் அந்த இடத்துலயா.. அப்படி ஒரு மேம்பாலமா.. வாகன ஓட்டிகளே மிகப்பெரிய ஹேப்பி நியூஸ்
சென்னை: சென்னையின் மிக முக்கியமான பகுதியான வள்ளுவர் கோட்டம், ஒரு பக்கம் தியாகராய நகரையும், மறுபக்கம் கோடம்பாக்கம், இன்னொரு பக்கம் அண்ணா சாலை சந்திப்பையும் இணைக்கிறது. இந்த பகுதியில் 195 கோடிக்கு மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் அண்ணா சாலை சந்திப்பு ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் கோடம்பாக்கம், வடபழனி செல்லவும், தியாகராய நகரில் இருந்து வரும் வாகனங்கள் நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம் வழியாக செல்லவும், வடபழனி கோடம்பாக்கம் மார்க்கமாக வரும் வாகனங்கள் அண்ணா சாலையில் செல்லவும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் வர வேண்டும். இதில் அண்ணா சாலையை இணைக்கும் பகுதி மிகச்சிறிய சாலையாகவும் இருக்கிறது.

இதன் காரணமாக சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்றாக வள்ளுவர் கோட்டம் சந்திப்பு இருக்கிறது. தினசரி பல்லாயிரம் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம் சந்திப்பை கடந்து செல்வதால் அந்த பகுதியில் வாகனங்கள் கடக்க நீண்ட நேரம் ஆகிறது.
மேம்பாலம்: இந்நிலையில், வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்து இருந்தார். இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 570 மீ நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய மேம்பாலம் எப்படி அமையப்போகுது: இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டல் முன்பாக தொடங்கி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்க போகிறார்களாம். வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமையப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பாலத்தில் முக்கியமான விஷேசம் என்னவென்றால் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் அமைக்க போகிறார்களாம். அப்படி அமைத்தால் சென்னை அண்ணா சாலை வரை போக்குவரத்து சிக்னலில் சிக்கும் வாகனங்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும்.

நிதி ஒதுக்கீடு: முக்கியத்துவம் வாய்ந்த வள்ளுவர் கோட்ட சந்திப்பு மேம்பாலத்திற்கான நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக ரூ.195 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மேம்பால கட்டுமான பணிகளுக்கு ரூ.67.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
நிலம் தேவை: வள்ளுவர் கோட்ட பாலப்பணிக்கு நில எடுப்பு பணிகளுக்கு ரூ.113.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு, 8014 ச.மீ அரசு நிலம் மற்றும் 2883 ச.மீ தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் நில எடுப்பு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications