தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி தொடர்பான வருடாந்திர கணக்கு விவர அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (GPF) என்ற திட்டம் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள திட்டம் ஆகும். இந்த திட்டம் அரசு ஊழியர்களுக்கு என்று உள்ள திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி, அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கணிசமாக முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகை ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு சேமிக்கப்படும். அதற்கு வட்டி விகிதம் மிக அதிகமாக கிடைக்கும். பிஎஃப் வட்டி விகிதம் தற்போது 8.25 சதவீதம் என்கிற அளவில் இருக்கிறது.

இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை நிர்வகிக்கிறது. மிகவும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. அரசு ஊழியர்கள், இதில் பணம் எடுக்க முடியும். கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ அவசரநிலைகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பணம் எடுக்க முடியும்.
அரசு ஊழியர் தனது PF கணக்கில் நிலுவையில் உள்ள தொகையில் 75% அல்லது அவரது 12 மாத ஊதியம், எது குறைவாக இருக்கிறதோ அதை எடுக்க உரிமை இருக்கிறது. கல்வி செலவு, திருமண செலவுகளுக்கு எடுக்க முடியும். அதேபோல் திடீரென கடுமையான உடல் நலக்குறைவு அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது, அரசு ஊழியர்கள் நிலுவையில் உள்ள தொகையில் 90% வரை திரும்பப் பெற முடியும். தற்போது உள்ள புதிய விதிகளின் படி, இந்தத் தொகையை 7 நாட்களுக்குள் பெறலாம்.
அதேபோல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிக்கும் அரசு ஊழியர்கள், வீடு கட்ட, ஏற்கனவே உள்ள வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த, வீடு வாங்க அல்லது மூதாதையர் வீட்டைப் பழுதுபார்க்க, நிலம் வாங்க பணத்தை எடுக்கலாம். 90% வரை எடுக்க முடியும். மேலும் கார், மோட்டார் சைக்கிள் போன்றவை வாங்கவும் பணத்தை எடுக்கலாம். ஆனால் 75% தொகை தான் கிடைக்கும். புதிய விதிகளின்படி, ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கு பணத்தை எடுக்கலாம்.
பிளாட் அல்லது வீடு வாங்குவதற்கு, அரசு ஊழியர்கள் மொத்த தொகையில் 90% வரை திரும்பப் பெறலாம். அதேபோல் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு எந்த குறிப்பிட்ட காரணத்தையும் குறிப்பிடாமல் தங்கள் வைப்பு நிதி கணக்கில் இருந்து 90% வரை திரும்பப் பெறலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொது வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி தொடர்பான வருடாந்திர கணக்கு விவர அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலை தளத்தில் https://cag.gov.in/ae/tamil-nadu/en பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications