16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வருக்கு நன்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதாவது 2 சதவீதம் உயர்த்தியதோடு, இந்த உயர்வினை ஜனவரி 1-ந்தேதியில் இருந்து உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்காக நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என த.அமிர்தகுமார் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்தசட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் முன்பே நல்ல அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார்கள்.. அவர்களின் எதிர்பார்ப்புக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்டாலின் முக்கியமான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

Tamil Nadu Government Employees Union thanks Chief Minister MK Stalin over Dearness Allowance hike

இதன்படி விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "கொரோனா காலத்தில் அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை இந்த ஆண்டே செயல்படுத்தும்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதை பரிசீலித்து ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம். இதன்படி 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

1-2025 முதல் 2 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு அலுவலர்களுக்கு உயர்த்தி வழங்க அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1-1-2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் ரூ.10 ஆயிரம் பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெற உள்ளார்கள். அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து, தொழிற்கல்வி பயில ஒரு லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுஅனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உள்ளோம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் 4.71 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசிற்கு ரூ.24 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க உள்ளோம். இதனால் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 கோடி கூடுதலாக செலவாகும்.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை பற்றி விரிவாக ஆராய ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அரசு அலுவலர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின்படி, இந்தக் குழு தனது பரிந்துரையை வரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளோம்.

திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக 9 மாத காலமாக இருந்த விடுப்பை 1.7.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்பு காலம் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை.

இதனால் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல், பதவி உயர்வு பாதிக்கப்பட்டு, பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதாவது 2 சதவீதம் உயர்த்தியதோடு, இந்த உயர்வினை ஜனவரி 1-ந்தேதியில் இருந்து உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்காக நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்றி தந்ததோடு, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் விதமாக நிலுவையின்றி ஜனவரி மாதத்தில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்துள்ளது மகிழ்வை தருகிறது. ஈட்டிய விடுப்பிற்கான பணபலன் பெறுவதை 1-4-2026 முதல் வழங்கப்படும் என்பதை முன்தேதியிட்டு 1-10-2025 முதல் வழங்குவதாக அறிவிப்பு என 9 முத்தான அறிவிப்புகளை செய்ததற்காக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த அறிவிப்புகளை செய்து எங்களை மகிழ்வித்ததுபோல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட எங்களது நிலுவை கோரிக்கைகளையும் முதல்வர் அறிவிப்பார் என நம்புகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+