குடும்ப அட்டைதாரர்களுக்கு.. இந்த "பொருளுக்கு" சிக்கல்? தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடி.. அப்ப கேழ்வரகு?
சென்னை: மாதம் 60,000 டன் அரிசியும், 15,000 டன் கோதுமையும் வழங்குமாறு, மத்திய உணவு துறையிடம், தமிழகம் சார்பில் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்?
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி பிரிவில் உள்ள, 1.04 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு மாதம் தலா 20 கிலோ அரிசி, இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது..

இதற்காக மாதம், 45,000 டன் அரிசி வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், கிலோ 34 ரூபாய் விலையில், இந்திய உணவு கழகத்திடம் இருந்து அரிசி வாங்கப்பட்டது. இந்த அரிசி விற்பனையை கடந்த ஜூன் முதல் மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது..
அரிசி தமிழகம்: இந்த அரிசியை நிறுத்திவிட்டாலும், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. அதாவது, "இந்த சீசனில் விவசாயிகளிடமிருந்து, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், இப்போதைக்கு 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது. இது வரும் ஆகஸ்ட் வரை போதுமானதாக உள்ளதால், மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை நிறுத்தினாலும்கூட, தமிழக ரேஷன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றார்கள்.
ஆனால், 4 நாட்களுக்கு முன்பு, அண்டை மாநிலங்களில் தமிழகத்துக்கு அரிசி கேட்கப்பட்டு, கடிதம் எழுதப்பட்டதாம்.. "உங்கள் மாநிலத்தில், மாநில தேவை போக உபரி அரிசி இருக்கிறதா? என்ன விலைக்கு வழங்கப்படும்?" என்று தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா மாநிலங்களுக்கு, தமிழக உணவு துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது..
இந்நிலையில்தான், மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், டெல்லியில் அனைத்து மாநில உணவு துறை அமைச்சர்கள் மாநாடு நடந்துள்ளது..
மாநாடு: இந்த மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு, திறந்தவெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 60,000 மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளதால் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு 15,000 மெ.டன் கோதுமை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து அமைச்சர் மாநாட்டில் பேசியபோது, "தமிழ்நாட்டில் மாறிவிட்ட உணவுப் பழக்கத்தின் காரணமாக கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கோதுமை உற்பத்தி இல்லாததால் கோதுமையின் தேவைக்காக பிற மாநிலங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மே 2022 வரை ஒன்றிய அரசிடமிருந்து மாதமொன்றிற்கு 30,648 மெட்ரிக் டன் கோதுமையை ஒதுக்கீடாகப் பெற்று வந்தோம்.

ஆனால் இப்போது ஜுன் 2022 முதல் மாதம் ஒன்றிற்கு 8,532 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அத்துடன் கூடுதலாக மாதமொன்றிற்கு 15,000 மெட்ரிக் டன் கோதுமையை அரிசிக்குப் பதிலாக எங்களுக்கு ஒதுக்கீடு செய்திடவோ அப்படி இல்லாவிட்டால் திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் வழங்கிடவோ கேட்டுக் கொள்கிறேன்.
கேழ்வரகு: தமிழ்நாட்டில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு ராகி மற்றும் சிறு தானியங்கள் வழங்கினால் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். கேழ்வரகு வழங்க உதவி செய்வதுடன், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும், நெல்லை, அரிசியாக மாற்ற வழங்கப்படும் மானியத்தை விரைந்து விடுவிக்க வேண்டும்" என்று மாநாட்டில் தெரிவித்துள்ளார் அமைச்சர் சக்கரபாணி.












Click it and Unblock the Notifications