ஸ்டாலின் ஆட்சியில் தான் மகளிர் முன்னேற்றம்.. பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு! பட்டியலோடு வந்த அரசு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மகளிர் வாழ்வில் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்கிறார்கள் எனவும் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், பெண்களை போற்றி பாதுகாப்பதிலும், அவர்களின் நலனில் அதிக அக்கறைக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஊக்கப்படுத்திடும் வகையில் புதுமைப்பெண் திட்டம், படிப்பை முடித்தவுடன் அவர்கள் தொழில் தொடங்கிட தமிழ்நாடு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கிடும் திட்டம் ஆகியவை அமலில் உள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின்: மேலும் பணிபுரியும் மகளிரை பாதுகாத்திட வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தோழியர் விடுதி திட்டம், திருமண உதவித் திட்டம், கிராமப்புற பெண்கள் பயன்பெறுகின்ற வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு உதவித் திட்டங்கள், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோர் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி மகளிர் நலன் பேணப்படுவதோடு, இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
கொரோனா காலத்தில் கருணை: பொறுப்பேற்றபோது கொரோனா எனும் பெரும் நோய்த் தொற்று தமிழ்நாட்டை அச்சுறுத்திய காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலன் காப்பதில் தன்னையே முன்னிறுத்திக் கொண்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் போதிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது வரலாறு. இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய், தந்தை இருவரையும் இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் இத்திட்டத்தினால் தாயுமானவராகப் போற்றப்படுகிறார்.
நிதியுதவி: மேலும், இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.27 இலட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.410.73 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கொள்கை: கொரொனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.3,000/- வீதம் ரூ.2 கோடியே 35 இலட்சம் வழங்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் "தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021" வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
விடியல் பேருந்து திட்டம் : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள். திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தில் நாளது வரையில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 இலட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விடியல் பயணத் திட்டம் தெலுங்கானா மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதுமைப் பெண் திட்டம் : மகளிர் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால், கடந்த ஆகஸ்ட் திங்கள் 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி புதுமைப் பெண் திட்டத்தின்" வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தடையில்லாமல் உயர்கல்வியைத் தொடர மாதந்தோறும் ரூ1,000 நிதியுதவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 2.73 இலட்சம் மாணவியர்கள் பயனடைந்துள்ளார்கள்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024 :சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியினை மதிப்பிட இயலும், மேலும், பாலின வேறுபாட்டை கலைந்திடவும் பெண்களுக்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலையினை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் சமூகநீதி, சமத்துவம், ஆகியவற்றை அளித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட "தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை" 2024-ஐ மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 21.2.2024 அன்று வெளியிட்டார்கள்.
அரசியலில் அதிகாரப் பகிர்வு: அடுத்த 10 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த கொள்கையானது ஐந்தாண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கொள்கையின் பயனாக, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிகாரப் பகிர்வை பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற்றில் மகளிரின் நிலையை மேம்படுத்துவதுடன், மகளிர் தங்களுக்குள் புதைந்துள்ள, இதுவரை கண்டறியாத சக்திகளை வெளிக்கொணர்ந்து பெண்கள் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களுக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான இலட்சியம் நிறைந்த சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார். மேலும் இத்திட்டத்தின்கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகளைக் கட்டுவதற்காக ரூ.69.70 கோடி செலவில் 1,291 சமையலறைகள் கட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு 1285 சமையலறைகள் கட்டி முடிக்கப்பட்டு 6 கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிபுரியும் மகளிருக்கு "தோழி விடுதிகள்" : சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் 19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் (TNWWHCL) புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள விடுதிகளை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்ததிட உத்தரவிட்டார்கள். முதற்கட்டமாக, திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் 31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
இரண்டாம் கட்டம்: இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன. சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.219 கோடி செலவில் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். 2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 முதல் டிசம்பர் 2023 வரை 7343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை : மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1,047 கோடி ரூபாய் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நலன்: 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000/- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023 மார்ச் முதல் ரூ.1,500/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூ.2.36 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர்.திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கிட மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்ப 9-11-2021 அன்று ஆணையிட்டுள்ளார்கள். தற்போது 6 வயது வரையிலான 22 இலட்சம் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.7.76 கோடி செலவில் 7,757 குழந்தைகள் மையங்களுக்கு தலா ரூ.10,000/ வீதம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு ஊட்டச்சத்து உணவு: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.53.76 கோடி செலவில் அனைத்துக் குழந்தைகள் மையங்களுக்கும் முன் பருவக் கல்வி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி ஊட்டசத்தை உறுதி செய்திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2022ல் ஒரு சிறப்பு வளர்ச்சி கண்காணிப்பு முகாம் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.18.68 கோடி செலவில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
பாராட்டு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு மகளிர் நலம் காக்கப்பட்டு வருவதை பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மனதாரப் பாராட்டி தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications