தமிழக அரசு விவசாயிகளுக்காக எடுத்த சூப்பர் முடிவு.. விதிகளில் மாற்றம் செய்து வரப்போகும் அரசாணை
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் கண்மாய்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விதிகளில் மாற்றம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் ஏராளமாக தேங்கி உள்ளது. இந்த மண்ணை அள்ளி விவசாயிகள் தங்கள் நிலத்தில் போடுவார்கள். அப்படி போட்டால், மண்வளத்திற்கு தேவையான அதிகளவில் ஊட்டசத்துக்கள் கிடைக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப இலவசமாக வண்டல் மண் வழங்கப்படும்.

வண்டல் மண்ணை விளை நிலங்களில் போட்டு வந்தால், அந்த விளை நிலத்தில் விளைபொருட்கள் செழிப்பாக வளரும். இந்த வண்டல் மண் எடுக்கும் அனுமதி, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை வழங்கப்படுவது தமிழகத்தில் வழக்கமாகும். இந்த வண்டல்மண் எடுப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டது போன்ற ஒரு நிலை உருவாகும் என்பதுடன் விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் திட்டம்என்பதால் பல ஆண்டுகளாக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு தற்போது வரை தொடங்கப்படவில்லை. தேர்தல் காரணமாக இந்த திட்டம் இதுவரை தொடங்காமல் உள்ளது. தேர்தல் இல்லை என்றால் மே மாதமே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும். எந்த கண்மாயில் எல்லாம் வண்டல் மண் எடுக்கலாம், எவ்வளவு வண்டல் மண் எடுக்கலாம் எனப்து பற்றி பொதுப்பணித்துறையும், ஊரக வளர்ச்சித்துறையும் ஆய்வு செய்து அதற்கான பட்டியலை தயாரிப்பார்கள் அதன்படி வண்டல் மண் எடுக்க அனுமதி அளிப்பார்கள். தற்போது எந்தெந்த கண்மாய்களில் இருந்து எவ்வளவு ஆழத்திற்கு மண் எடுக்கலாம், எவ்வளவு அளவு மண் எடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை விதிகளின்படி விவசாயிகளுக்கு நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றிக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டரும் மண் எடுக்கலாம். இது தவிர மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 கன மீட்டரும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் கட்டணம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விதிகளில் தமிழக அரசு இந்த ஆண்டு மாற்றம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எப்படிப்பட்ட மாற்றம் என்பது அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு பிறகே தெரிய வரும். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications