கவுன்சிலர் டூ முதல்வர் பதவி ரேஸ் வரை-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜியின் பின்னணி இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி.. 2006-ம் ஆண்டு முதல் கடந்த 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத உச்சரிப்புக்குரியவர். திமுகவில் அரசியல் பயணத்தை தொடங்கி அடுத்தடுத்து அரசியலில் அத்தனை உச்சங்களையும் தொட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்தபடியே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

Tamil Nadu Governor accepts resignation- Who is Senthil Balaji?


திமுக ஒன்றிய கவுன்சிலர்: 1996-ல் செந்தில்குமார்தான் செந்தில் பாலாஜியின் ஒரிஜனல் பெயர். திமுகவின் ஒன்றிய கவுன்சிலராகப் போட்டியிட்டு வென்றவர். பின்னர் அண்ணா திமுகவுக்குள் நுழைந்தார். 2000-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணத்தை தொடங்கிய செந்தில்குமார், தமது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றினார். அதே கால கட்டத்தில் அதிமுகவில் கிடுகிடுவென பதவிகளை பெற்று வேகமாக முன்னேறினார். அதிமுக கரூர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர், 2004-ல் கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், 2006-ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று வென்று எம்.எல்.ஏ.வானார் செந்தில் பாலாஜி.

அதிமுகவில் செந்தில் பாலாஜி அசுர வேகம்: 2007-ம் ஆண்டு செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. இன்னும் அதிவேகமாகியது செந்தில் பாலாஜியின் அரசியல் பயணம். அதிமுகவின் அதிகார மையங்களாக இருந்த சசிகலாவுடனும் சசிகலாவின் அத்தனை உறவுகளுடனும் மிக நெருக்கமான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இத்தகைய நெருக்கங்களால் 2011 தேர்தலிலும் போட்டியிட்டு வென்ற கையோடு வலுவான போக்குவரத்து துறை அமைச்சர் பதவியும் செந்தில் பாலாஜிக்குக் கிடைத்தது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் திடீர் திடீரென நிகழும். அத்தனை அமைச்சரவை மாற்றங்களிலும் தப்பிப் பிழைத்து கொண்டே இருந்தவர் செந்தில் பாலாஜி.

Tamil Nadu Governor accepts resignation- Who is Senthil Balaji?

முதல்வர் பதவி ரேஸில்.. : 2014-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அப்போது புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த ரேஸில் செந்தில் பாலாஜியின் பெயரும் பலமாக அடிபட்டது. காரணம் சசிகலாவின் உறவினர் இளவரசி குடும்பத்துடனான செந்தில் பாலாஜியின் அதீத நெருக்கம்தான். ஆனால் இதுவே செந்தில் பாலாஜியின் அரசியல் அசுரவேகத்துக்கு ஆப்பும் வைத்தது என்பது யதார்த்தம்.

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்:
ஆம் 2015-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரான போது செந்தில் பாலாஜியை ஓரம்கட்டி ஒதுக்கி தள்ளினார். அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி என அத்தனையையும் பறித்துவிட்டார் ஜெயலலிதா. ஆனாலும் சசிகலா குடும்பத்துடனான அதீதமான உறவு நெருக்கத்தால் 2016 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.வானார். ஆனாலும் ஜெயலலிதாவின் அதிருப்தியை சமாளிக்க என்னவெல்லாமோ சித்து வேலைகளை செய்தார். மண் சோறு சாப்பிடுவது, காவடி எடுப்பது என்றெல்லாம் நாடகங்களை நடத்தினார் செந்தில் பாலாஜி.

திமுகவுக்கு ரிட்டர்ன்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் இடையே மோதல் வெடித்த போது இயல்பாகவே சசிகலா பக்கம் நின்றார். பின்னர் இபிஎஸ்- தினகரன் இடையேயான பிளவின் போது தினகரன் பக்கம் போனார் செந்தில் பாலாஜி. ஆனால் தினகரனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி 2018-ல் திடீரென திமுகவில் ஐக்கியமானார். தாய்க் கழகத்துக்கே திரும்பினார் செந்தில் பாலாஜி.

திமுகவில் வலுவான சக்தி: 2019-ல் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் செந்தில் பாலாஜி. அத்துடன் நிற்காமல் 2019 லோக்சபா தேர்தலின் போது தமது முழு பலத்தையும் திமுகவுக்காக களமிறக்கினார். இதனால் திமுக தலைமையின் குட்புக்கில் கிடுகிடுவென உயர்ந்தார் செந்தில் பாலாஜி. 2021 சட்டசபை தேர்தலில் வென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். ஒட்டுமொத்த மேற்கு மண்டலம் எனப்படும் கொங்கு மண்டல திமுகவே செந்தில் பாலாஜி வசம் ஒப்படைத்தது திமுக தலைமை. மிக முக்கியமான மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சரவை இலாகாக்களும் செந்தில் பாலாஜிக்கு தரப்பட்டன.

அமலாக்கத்துறையால் கைது- சிறை:
ஆனால் செந்தில் பாலாஜியின் ஒட்டுமொத்த அரசியல் எதிர்காலத்தையும் பல்வேறு வழக்குகள் அசைத்துவிட்டன. அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு 200 நாட்களுக்கும் மேலாக சிறை தண்டனையும் அனுபவித்து வருகிறார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஆளுநர் ரவி. ஆனால் ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது என போராடியது தமிழ்நாடு அரசு. இதனால் தேசிய ஊடகங்களிலும் செந்தில் பாலாஜி விவாதப் பொருளானார்.

அமைச்சர் பதவி ராஜினாமா: தற்போது ஜாமீன் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். இதனடிப்படையில் ஆளுநர் ரவிக்கு பரிந்துரைத்தார் முதல்வர் ஸ்டாலின். தற்போது ஆளுநர் ரவியும் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அதிமுகவிலும் திமுகவிலும் அதிஅதிவேகமாக உச்சத்துக்கு செல்வதும் பெரும் சரிவை எதிர்கொள்வதும் செந்தில் பாலாஜியின் அரசியல் வரலாறாகவே இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+