2-வது முறை அனுப்பிய 10 மசோதாக்கள்- ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் செய்த 'காரியம்'-தமிழ்நாடு அரசு 'ஷாக்'!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது தவறானது; இது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை முடக்கும் செயல் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை 3 ஆண்டுகாலம் நிலுவையில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. இந்த மசோதாக்களை சட்டசபைக்கு திருப்பியும் அனுப்பவில்லை; இந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கும் அனுப்பவில்லை; 10 மசோதாக்களையும் கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ரவி. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மசோதாக்களை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தம்மிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை உடனடியாக தமிழ்நாடு சட்டசபைக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு அரசும் சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி 10 மசோதாக்களையும் 2-வது முறையாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
மாநில சட்டசபைகளில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2-வது முறையாக அனுப்பப்படுகிற போது அந்த மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்துவிடுகிறார் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு 2-வது முறையாக அனுப்பிய 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: 2-வது முறையாக சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உள்துறை அமைச்சகம் மூலமாக ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது மசோதாக்கள் மீது ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிற முயற்சி.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குழந்தைத் தனமாக உள்ளது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இப்படியான ஒரு ஆளுநரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை நடத்த முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி. ஆகையால் தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெறுவது மட்டுமே தீர்வாக அமையும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications