பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு! என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும்
சென்னை: இந்தாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. இந்தாண்டும் இதேபோன்ற பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பொங்கல் பரிசு: அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
என்ன பொருட்கள்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதங்களில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கி 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,92 கோடி செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

விலை என்ன: மேலும், இந்த அறிவிப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு எத்தனை ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி ரூ.35.20க்கு கொள்முதல் செய்யப்படும். ஒரு கிலோ சர்க்கரை 5% ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூ.40.61க்கு கொள்முதல் செய்யப்படும். மேலும், முழு கரும்பு போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி சேர்த்து ரூ.33க்கு கொள்முதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. அது குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அரசாணையில் இல்லை. இருப்பினும், நாளைய தினம் ரூ.1000 ரொக்கம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications