காலை உணவு திட்டம்.. 90% குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு! மாநில திட்டக்குழு ரிப்போர்ட்டில் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து மாநில திட்ட குழு மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. இந்த மதிப்பீடு அறிக்கையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், சுமார் 90%க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நினைவுகூரும் திறன் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுமைப் பெண் திட்டத்தாலும் 3.28 லட்சம் மாணவிகள் பயன் பெற்று இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வித் துறை சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்கவும் இடைநிற்றலைக் குறைக்கவும் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

tamil nadu school

முதல்வரின் காலை உணவுத் திட்டம்: அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கடந்த 2022 செப்டம்பர் 15ம் தேதி அரசு தொடக்கப் பள்ளிகளில் தொடங்கியது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மாணவர்கள் பசியின்றி பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்யும் வகையிலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ரத்த சோகை பாதிப்பு மாணவர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், அதற்குத் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆய்வு: இதற்கிடையே காலை உணவுத் திட்டத்தின் செயல்திறனை மதிப்பிட மாநிலத் திட்டக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வருகை விகிதம், வகுப்பறை ஈடுபாடு, கல்வி செயல்திறன், ஊட்டச்சத்து நிலை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகிய இருவரின் கண்ணோட்டங்கள் ஆகியவை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீடு அறிக்கையைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் இணைந்து முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார்.

அதில் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், பள்ளிகளுக்குக் குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் கற்றல் ஆர்வம், வகுப்பறை கவனிப்பு, விளையாட்டில் ஈடுபாடு உள்ளிட்டவற்றிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நினைவாற்றல் அதிகரிப்பு: மேலும், 90%க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது முந்தைய பாடங்களை நினைவுகூரும் திறன் என்பது 90 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகளிடையே அதிகரித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கையெழுத்து, வாசித்தல், பேச்சுத் திறன் ஆகியவையும் கூட மேம்பட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தால் என்ன பயன்: மாநில திட்டக்குழுவின் இந்த மதிப்பீட்டு அறிக்கையில் புதுமைப்பெண், எண்ணும் எழுத்தும் ஆகிய திட்டங்கள் குறித்த மதிப்பீடுகளும் இடம்பெற்று இருந்தன. குறிப்பாகப் புதுமைப் பெண் திட்டத்தில் மொத்தம் 3.28 லட்சம் மாணவிகள் பயன் பெற்று இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 27.6% பேரும், விவசாயம் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 39.3% பேரும் புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேர்ந்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+