டிரைவிங் லைசென்ஸ்ல பிரச்சனையா? RTOவின் அட்டகாச ப்ளான்கள்.. வருகிறது மொத்தம் 42 ஆன்லைன் சேவைகள்
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்து சேவை தொடர்பான அம்சங்களில் புதிய மாற்றத்தை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது.. அதிலும் 42 சேவைகளை ஆன்லைனிலேயே வழங்க போகிறதாம்.
தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது...குறிப்பாக மாநில அரசுகளால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (Regional Transport Office - RTO) பல்வேறு திட்டங்களுடன் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
டிரைவிங் லைசென்ஸ் முதல், வாகனப் பதிவெண் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மட்டுமே பெற முடியும்..

டிரைவிங் லைசென்ஸ்: இவற்றில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று தான் விண்ணப்பித்து பெற முடியும்... இப்படிப்பட்ட சூழலில்தான், ஆர்.டி.ஓ அலுவலக சேவைகளை டிஜிட்டல் முறையில் மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. மொத்தம் 42 வெவ்வேறு விதமான சேவைகளை இனி ஆன்லைனில் பெறலாம் என்று புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, கடந்த மார்ச் 23-ந்தேதி, சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்..
42 சேவைகள்: அதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல், ஆன்லைன் மூலமாகவே, தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறியிருந்தார்.. அமைச்சரின் இந்த அறிவிப்பானது, இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.. அந்தவகையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மொத்தம் 42 சேவைகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமலேயே பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இப்போதைக்கு 42 சேவைகளில், 22 டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும்... மற்றவை எல்லாம் மோட்டார் வாகனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்கள் தொடர்பானவையாகும்.
ஆர்டிஓ: லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களில் பெயர், முகவரி போன்றவற்றை மாற்றவும், நகல் எல்எல்ஆர் உரிமங்கள் பெற்றிடவும், மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவு பெறவும், வாகன பதிவுக்கு தடையில்லா சான்றிதழ் பெறவும், மொபைல் எண்ணை புதுப்பிக்கவும், வாகனங்களை மற்ற இடங்களுக்கு மாற்றும்போது நகல் மோட்டார் வாகன ஆவணங்கள் அல்லது தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கும் இனிமேல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவுக்கான விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்சிக்கு என்ஓசி வழங்குதல், ஆர்சியில் அட்ரஸ் மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம்...
மக்கள் ஹேப்பி: இதுபோன்ற வசதிகளால், இனி தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்... அல்லது முகவர்களின் செல்வாக்கையும் குறைப்பதோடு லஞ்சத்தையும் குறைக்கும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்... இந்த புதிய திருத்தம் தமிழகம் முழுவதும் இந்த வாரம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த டிஜிட்டல் சேவையால், புரோக்கர்கள், ஏஜெண்ட்களின் தலையீடுகள் இனி குறையும் என்று கூறப்படுவது பொதுமக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்துவருகிறது..












Click it and Unblock the Notifications