செம ஸ்மார்ட்! 9 மாதங்களில் 4,14,802 வண்டிகள் உற்பத்தி! இந்திய அளவில் தமிழ்நாடு நம்பர் ஒன்!
சென்னை: மின்சார வாகனம் (E-Vehicle) உற்பத்தியில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாகன டேஷ்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்துந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல துறைகளில், தமிழ்நாடு இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாகத் தோல் பொருட்கள் ஏற்றுமதி, ஜவுளி ஏற்றுமதி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி என 15 வகையான துறைகளில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாடு மின்சார வாகனங்கள் உற்பத்தியில் (இவி) முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதாவது நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட பத்து லட்சம் மின் வாகனங்களில் நான்கு லட்சம் மின்சாரம் வானகங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்திய மின் வாகனச் சந்தைக்குக் கணிசமான பங்களிப்பைத் தமிழ்நாடு செய்துள்ளது எனத் தெரிகிறது.
இரு சக்கரம் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை விற்பனையாகி உள்ள வாகனங்கள், தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் பத்து புகழ்பெற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என்பதை ஒன்றிய அமைச்சகத்தின் அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.

இது குறித்து இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஜனவரி 1, 2023 முதல் செப்டம்பர் 20, 2023 வரை முறையாகப் பதிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 10,44,600 எலெக்ட்ரிக் வாகனங்களில் 40% வாகனங்களைத் தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதாவது 4,14,802 மின் வாகனங்களைத் தமிழ்நாடு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன எனப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரக அலுவலகங்களில் (ஆர்டிஒ) பதிவாகி உள்ள தரவுகள் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள மற்ற எந்த மாநிலங்களையும் விட விஞ்சும் அளவுக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது என்று இது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு மைல்கல் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஏற்கெனவே முதல் 10 உலகளாவிய ஆட்டோ மொபைல் மையங்களுக்குள் தமிழ்நாடு உள்ளது என்றும் இப்போது EV வாகன உற்பத்தியில் உலகளாவிய தலைநகராக மாறுவதற்காக லட்சியத்துடன் அரசு இலக்கு நிர்ணயித்து இயங்கி வருகிறது என்றும் அரசுத் தரப்பில் பேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "இது முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றே சொல்வேன். ஏனென்றால், அவரது ஆட்சி அமைந்தது முதல் அனைத்து துறைகளுக்குச் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
அனைவருக்குமே தெரியும், ஏற்கெனவே இந்தியாவின் ஆடோமொபைல் துறையில் தமிழ்நாடு தலைநகரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு 5.37 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்தியைச் செய்து தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது.

அதைப் போல எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம். அந்த வரிசையில் மின்சார வாகன உற்பத்தியிலும் முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளோம்.
இந்த இடத்தைப் பிடித்தது முக்கியமல்ல; அதைச் சரியாகத் தக்கவைத்துக் கொண்டு இன்னும் பிரம்மாண்டமான சாதனையை இவி துறையில் தமிழ்நாடு விரைவில் செய்யும்.
ஏற்கெனவே பல புதிய நிறுவனங்களைக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். எங்களையும் அதிக கவனம் செலுத்தும்படி அவர் அறிவுரை வழங்கி இருக்கிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல முயற்சிகள் செயல்வடிவம் பெற உள்ளன.

வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்' அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட உள்ளார். அந்தத் தகவல்களை நான் இப்போதே கூற முடியாது. ஆனால், அதிகப்படியான அறிவிப்புகள் காத்திருக்கின்றன என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றவர் தொடர்ந்து சில விளக்கங்களை முன்வைத்தார்.
"இந்த ஆட்சியில் முக்கியமான மாற்றம் என்னவென்றால் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி. வளர்ச்சி என்பதை ஓர் இடத்தில் மட்டும் குவியவிடாமல் பரவலாக்கி இருக்கிறோம்" என்கிறார்
மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை எட்டுவதற்கான காரணம், நம் மாநிலத்தில் தொழில்துறை வசதிகள் நல்ல நிலையில் உள்ளன, அத்துடன் அரசின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக உள்ளது.

அரசை அணுகுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன, இவை தவிரப் பொருளாதாரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வசதிகளுக்கான கட்டமைப்பு தரமாக உள்ளன.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம் போன்ற முக்குமான நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றும் வகையில் கடந்த ஜனவரி மாதம் புதிய கொள்கை அரசால் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகைகள், நிறுவனங்களுக்குத் தனியாக வரிச் சலுகைகள், வெகுமதிகள், மானியங்கள் போன்றவற்றை வழங்க அரசு முடிவு செய்து சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி மின்சார வாகன நிறுவனங்களின் முதலீட்டைப் பெற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 30% மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னை, ஓசூர் போன்ற நகரங்களில் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகமாகச் செயல்பட்டு வருகின்றன. Ola, Ather Energy, Hyundai, Simple one, TVS, Citroen, BMW எனப் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவி வாகனங்களைத் தயாரித்து வருகின்றன.
இந்த அனைத்து காரணங்களினால்தான் தமிழ்நாடு மின்சார வாகன உற்பத்தியில் முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications