ஒரே நாளில் குவிந்த தொழில் நிறுவனங்கள் .. தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முகவரி..மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தமிழ்நாடு பண்பாட்டின் முகவரியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களின் முகவரியாக மாறி விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தின் தொழில் துறையில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த வாரங்களில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தொழிற்சாலையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் தன்னிறைவு அடைய செய்வதே தனது இலக்கு என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

55,054 பேருக்கு வேலைவாய்ப்பு
ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது. மேலும். 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இது தவிர 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அதாவது மொத்தம் 49 திட்டங்களின் மூலம் 28,508 கோடி ரூபாய் முதலீட்டில் 83,482 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், வணிகம் புரிதலுக்குத் தேவையான நூறு சேவைகள் இந்த இணையதளத்தில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களின் முகவரி
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- தமிழ்நாடு பண்பாட்டின் முகவரியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களின் முகவரியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 489.78 கோடி ரூபாய் திரண்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.

எளிமையான நடவடிக்கை
இன்றைய நிகழ்வை தமிழ்நாடு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் துவங்கும் நிறுவங்கள் பிற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.உலக அளவில் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தமிழக தொழில்துறை புத்துணர்வை பெற்றுள்ளது.தொழில் பிரிவுகளை எளிமையாக்கவும் முதலீட்டாளர்கள் பயன்பெற எல்லா வழிமுறைகளையும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.

தட்டாமலே திறக்கும்
இணையமுறை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு காணொளி மூலமாக சந்திப்புகள் நடைபெறும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள் ஆனால் தட்டாமலே திறக்கும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கும் புதிய கண்டுபிடிப்புகளான புத்தாக்க மையங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 95.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதிகொள்கை ஆராய்சி கொள்கை உட்பட தொழில் துறைசார்ந்த பல்வேறு கொள்கைகளை அமைக்க திட்டமிட்டுளோம்

மிப்பெரிய வளர்ச்சி
இதன் மூலம் தமிழ்நாடு தொழில் துறையில் மிக பெரிய வளர்ச்சியை அடையும். அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக தொழில் துவங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன இதனால் அந்தந்த பகுதிகள் வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications