4வது நபர்.. திடீரென ராஜினாமா செய்யும் "டாப்" தமிழக ஐஏஎஸ் அதிகாரி.. அந்த கட்சிக்கு போறாராமே? ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஷம்பு கல்லோலிகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்து, பல்வேறு கட்சிகளில் இணைவது வழக்கம் ஆகி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.
இவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். அங்கு பாஜக தலைவர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அரசியலுக்குள் நுழைந்தார்.

ஐஏஎஸ் அதிகாரி
தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளில் இதேபோல் அடுத்தடுத்து சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சந்தோஷ் கே மிஸ்ரா, சகாயம் ஐஏஎஸ், விஜய் மூர்த்தி பின்காலே ஆகியோர் தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்து சர்வீஸ் முடியும் முன்பே ராஜினாமா செய்தனர். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜக்மோகன் சிங் ராஜூ விருப்ப ஓய்வு பெற்றார்.

விருப்ப ஓய்வு
இவர் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே கடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பாக அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு வெறும் 7,286 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதேபோல் சகாயம் ஐஏஎஸ் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவரும் அரசியலில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

தமிழ்நாடு கேடர்
அதேபோல் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் மக்கள் நீதி மையத்தில் இணைந்தார். மேலும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் 2 வருடங்களுக்கு காங்கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான ஷம்பு கல்லோலிகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இவர் இணை தலைமை செயலாளர் என்ற கிரேடில் இருக்கிறார். 1991ம் ஆண்டில் ஐஏஎஸ் ஆகி தமிழ்நாடு பேட்ச் அதிகாரி ஆனார்.

யார் இவர்?
தற்போது சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் பொறுப்பில் அவர் பணியாற்றி வருகினார். இந்த நிலையில்தான் அவர் ராஜினாமா கடிதம் அளித்து உள்ளார். விருப்ப ஓய்வு பெறுவதற்காக அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார். முன்னதாக திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இவர் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி இருக்கிறார். பல துறைகளில் செயலாளராக பணியாற்றி உள்ளார்.

கர்நாடகா
இந்த நிலையில் அவர் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவிற்கு செல்ல இருக்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலகாம் தொகுதி வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க உள்ளது. இதற்காக கர்நாடகாவில் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஷம்பு கல்லோலிகர் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவை எடுத்து உள்ளார்.












Click it and Unblock the Notifications