இடி, மின்னலுடன் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆடி மாதத்திலேயே கனமழை தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வடமாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்கள்
அதேபோல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

லேசான மழை
அதேபோல் வரும் 11ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில், குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications