லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலை நாளை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 11 நட்சத்திர தொகுதிகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளன.

18-வது லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை தமிழகம் உட்பட 17 மாநிலங்கள், புதுச்சேரி உட்பட 4 யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது.

Tamil Nadu Lok Sabha Election 2024 11 Key Candidates constituencies

தமிழகத்தில் தேர்தல் களம்: தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன. கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை:

இந்தியா கூட்டணி: திமுக 22 (+1கொமதேக); காங்கிரஸ் 9; சிபிஐ -2; சிபிஎம் -2; விசிக- 2; மதிமுக-1; முஸ்லிம் லீக்-1

அண்ணா திமுக கூட்டணி: அதிமுக 34 (+1 புதிய தமிழகம்); தேமுதிக 5

பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி: பாஜக 23 (தமமுக +ஐதேக+ புதிய நீதிக் கட்சி) ; பாமக- 10; தமாகா- 3; அமமுக 2; சுயேட்சை- 1

நட்சதிர தொகுதிகள்: தென்சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி.

தென்சென்னை: தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுக 9 முறையும் காங்கிரஸ் 5 முறையும் வென்றுள்ளது. அதிமுக 3 முறை தென் சென்னையைக் கைப்பற்றியிருக்கிறது. திமுகவின் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன், டிஆர் பாலு, காங்கிரஸின் டிடி கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராஜன், வைஜெயந்தி மாலா ஆகியோர் வென்ற தொகுதி. 2019-ல் தமிழச்சி தங்கப்பாண்டியன் ( திமுக) 5,64,872; ஜெயவர்த்தன்(அதிமுக) 3,02,649; ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம)1,35,465; ஷெரின் (நாம் தமிழர் கட்சி) 50,222 வாக்குகளைப் பெற்றனர். இம்முறை தமிழச்சி தங்க பாண்டியன், ஜெயவர்தன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் வேட்பாளராக களம் காண்கிறார். 2014-ம் ஆண்டு பாஜக, இத்தொகுதியில் 2,56,786 வாக்குகளை வாங்கி இருந்தது. பாஜகவின் மூத்த தலைவரான தற்போதைய மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் அப்போது போட்டியிட்டார். ஆனால் 2009-ல் இல.கணேசன் வெறும் 42,925 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். இதனால் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் களம் காண்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

சிதம்பரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இத்தொகுதியில் தற்போது 6-வது முறையாக போட்டியிடுகிறார் திருமாவளவன். இதுவரை 2 தேர்தல்களில் மட்டுமே வென்றுள்ளார் திருமாவளவன். இம்முறை 3-வது வெற்றிக்காக போராடுகிறார் திருமாவளவன். திமுகவின் வாக்கு வங்கி, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வாக்கு வங்கி, காங்கிரஸின் வாக்கு வங்கி, தலித்துகளின் வாக்குகள் இவை அனைத்தும் திருமாவளவனுக்கு நம்பிக்கையானவை. 2019-ல் அண்ணா திமுகவின் சந்திரசேகர்(அதிமுக) 4,97,010; இளவரசன் (அமமுக) 62,308 வாக்குகள் பெற்றிருந்தனர். இம்முறை அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லை. அமமுகவின் வாக்குகளையும் தங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதாகவும் கணக்கிட்டு பாஜக களம் காண்கிறது. 2014-ல் 4,29,536 வாக்குகள் பெற்று வென்ற அதிமுகவின் சந்திரகாசம் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

தருமபுரி: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகள்; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி; மூத்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகள்; கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தின் சகோதரி என பெரிய பாரம்பரியம் கொண்ட சவுமியா அன்புமணி இம்முறை பாமகவின் வேட்பாளராக களம் காண்கிறார். இத்தொகுதியில் சவுமியாவின் கணவர் அன்புமணி 2014-ல் 4,68,194 வாக்குகள் பெற்று வென்றவர். ஆனால் 2019-ல் திமுகவின்
செந்தில்குமார்(திமுக) 5,74,988 வாக்குகளைப் பெற்று வென்றார். அத்தேர்தலிலும் பாமகவின் அன்புமணி 5,04,235 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த வாக்கு வங்கியை முழுமையாக நம்பி களம் காண்கிறார் சவுமியா அன்புமணி.

வேலூர்: புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் களம் காண்கிறார். திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜகவின் தாமரை சின்னத்தில் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார். திமுகவின் உதயசூரியன் சின்னமும் பாஜகவின் தாமரை சின்னமும் நேரடியாக மோதும் தொகுதி. கடந்த தேர்தலிலும் ஏசி சண்முகமும் கதிர் ஆனந்தும் மோதினர். கதிர் ஆனந்த் (திமுக) 4,85,340 ; ஏசி சண்முகம்( அதிமுக) 4,77,199 வாக்குகளைப் பெற்றனர். கதிர் ஆனந்த் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

கோவை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை களம் காணும் தொகுதி. கோவை குண்டு வெடிப்புக்குப் பின்னர் பாஜக வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கி வைத்துள்ளதாக நம்புகிறது. 2009-ல் பாஜகவின் செல்வகுமார் 37,909 வாக்குகள்தான் பெற்றார். ஆனால் 2014-ல் பாஜகவின் வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் (தற்போது ஆளுநர்) 3,89,701; 2019-ல் சிபி ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளைப் பெற்றிருந்தார். இத்தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி வலுவாக உள்ளது.

நீலகிரி: மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் தொகுதி. திமுகவின் மூத்த தலைவர் ஆ.ராசா களம் காண்கிறார். நீலகிரி தொகுதியில் 7 முறை வென்ற கட்சி காங்கிரஸ். 2 முறை பாஜகவும் வென்றுள்ளது. திமுகவும் 2 முறை வென்றுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. 2009-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் திமுகவின் ஆ.ராசா வென்றார். இத்தொகுதியில் அமமுகவுக்கு சுமார் 40,000 வாக்குகள் உள்ளன. ஏற்கனவே பாஜக வென்ற தொகுதி ப்ளஸ் அமமுக வாக்குகள் கை கொடுக்கும் என்பது அக்கட்சி நம்பிக்கை.

ராமநாதபுரம்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக கூட்டணியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். பாஜக, அமமுக மற்றும் முக்குலத்தோர் வாக்குகளை மட்டுமே நம்பி சுயேட்சையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், லோக்சபா தேர்தலில் முதல் முறையாக தனி ஒருவராக களம் காண்கிறார்.

தேனி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி. இத்தொகுதியில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய தங்கத் தமிழ்ச் செல்வன் வேட்பாளராக களம் காண்கிறார். தேனி தொகுதியில் ஏற்கனவே எம்பியாகவும் இருந்தவர் டிடிவி தினகரன். அதிமுகவின் வாக்குகள் சிதறி தமக்கு கிடைக்கும்; முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்கும் என்பது தினகரனின் நம்பிக்கை.

தூத்துக்குடி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரி கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிடும் தொகுதி. 2019-ல் 5,63,143 வாக்குகள் பெற்று வென்றவர் கனிமொழி கருணாநிதி. அத்தேர்தலில் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இம்முறை தமிழ் மாநில காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் மோதும் தொகுதி இது.

தென்காசி: தேவேந்திர குல வேளாளர் சமூகத் தலைவர்களான டாக்டர் கிருஷ்ணசாமியும் ஜான் பாண்டியனும் நேரடியாக மோதுகின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இத்தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தோற்று தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜான் பாண்டியன் தற்போது பாஜகவின் தாமரை சின்னத்தில் களம் காண்கிறார்.

கன்னியாகுமரி: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். 2009-ம் ஆண்டு தேர்தலிலேயே பொன். ராதாகிருஷ்ணன் 2,54,474 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். 2014-ல் 3,72,906 வாக்குகள் பெற்று எம்பியானார் பொன்னார். 2019 தேர்தலிலும் கூட 3,67,302 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜகவின் வலிமையான வாக்கு வங்கி மீது அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார் பொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+