ஓட்டுப் போட ஒன்றரை லட்சம் செலவு..பறந்து வந்த டிஆர் பாலுவின் வாரிசு..! ஆனால் 'அவர்’ ஓட்டு போடலையே!
சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவருமான டாக்டர்.கிருஷ்ணசாமி நடந்து முடிந்த தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்யாத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தனது தாத்தா டி ஆர் பாலுவிற்கு வாக்களிப்பதற்காக லண்டனில் படித்துக் கொண்டிருக்கும் அவரது பேரன் சூர்யா சென்னை வந்தார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்

சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பிரபல அரசியல் கட்சித் தலைவர்களும் நடிகர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தியதோடு அவற்றை சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியிட்டனர்.
வாக்களித்த பிரபலங்கள்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், உள்ளிட்ட பலரும், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், சிவகார்த்திகேயன், டி.ராஜேந்தர், திரிஷா உள்ளிட்ட சினிமா துறை சார்ந்த பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
நடிகர் விஜய்: வெளிநாடுகளில் இருந்து கூட தமிழகத்திற்கு வந்த பலர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அந்த வகையில் துபாயில் இருப்பதாக கூறப்பட்ட நடிகர் விஜய் திடீரென சென்னை வந்து தனது வீட்டிலிருந்து காரில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல லண்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ்நாடு வந்திருந்த வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில் தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டவருமான டாக்டர்.கிருஷ்ணசாமி நடந்து முடிந்த தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்யாத நிலையில் அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
டிஆர் பாலுவின் பேரன்: திமுகவின் மிக முக்கிய நிர்வாகியும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டவருமான டி.ஆர்.பாலுவின் பேரனும் , அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகனுமாகிய சூர்யா தற்போது லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனது தாத்தா டிஆர் பாலுவுக்கு வாக்களிப்பதற்காக லண்டனில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம் வந்த சூர்யா தனது தாத்தா மற்றும் குடும்பத்தினருடன் சென்று பீர்க்கங்கரணையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி: அதே நேரத்தில் தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மருத்துவரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை. கோவை மக்களவைத் தொகுதியில் அவருக்கு வாக்கு இருக்கும் நிலையில் தென்காசி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததால் அவர் வாக்களிக்கவில்லை என அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications