பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு..வாக்களிக்க வராத ஏகனாபுரம் மக்கள்..9 ஓட்டுக்கள் மட்டுமே பதிவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாட்களுக்கு மேலாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராடி வரும் நிலையில், இன்று லோக்சபா தேர்தலை அவர்கள் புறக்கணித்து உள்ளனர். இதனால் காலை 11 மணி நிலவரப்படி ஏகனாபுரத்தில் வெறும் 9 வாக்குகளே பதிவானதாக கூறப்படுகிறது.
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு தாலுகாக்களில், பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. இந்த கிராமங்களில், 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இவர்கள் இந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படுவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் 600 நாட்களுக்கு மேலாக பரந்தூர் விமான நிலையம் அமைபதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு கூட வேட்பாளர்கள் ஓட்டு கேட்க போகவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல், அந்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் தபால் வாக்குகள் கூட போடாமல் அந்த கிராம மக்கள் இருந்தனர்.
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்துள்ள நிலையில், தபால் வாக்குக்காக வந்த தேர்தல் அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர். மூத்த குடிமக்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ள நிலையில், வாக்களிக்க ஒருவர் கூட தயாராக இல்லை என்று மூத்த குடிமக்கள் அதிகாரிகளை திருப்பியனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மதியம் 11 மணி நிலவரப்படி வெறும் 9 வாக்குகளே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில் வெறும் 9 ஓட்டுக்களே பதிவாகியுள்ளது.
லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்துள்ளதால் யாரும் வாக்கு செலுத்த போகவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல், திருவள்ளூர் குமாரராஜ பேட்டை வாக்குச்சாவடியில் இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. 976 வாக்காளர்களை கொண்ட குமாரராஜ பேட்டையில் இதுவரை யாரும் வாக்கு செலுத்த வரவில்லை.
பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கட்சிகளின் முகவர்களும் வாக்குச்சாவடிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமாரராஜ பேட்டை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமாரராஜ பேட்டை பகுதியில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் வேங்க வயல் கிராம மக்களும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து ஓட்டு போடாமல் இருந்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திற்கு பூத் ஏஜெண்ட் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்து ஓட்டு போடாமல் புறக்கணித்து உள்ளனர். தேர்தல் அலுவலர்கள் இது தொடர்பாக அங்கு ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்:
கள்ளக்குறிச்சி 26.58%
திண்டுக்கல் 26.34%
நாமக்கல் 26.07%
கரூர் 26.07%
சேலம் 25.97%
விழுப்புரம் 25.69%
தருமபுரி 25.66%
பெரம்பலூர் 25.62%
ஆரணி 25.53%
திருப்பூர் 25.47%
விருதுநகர் 25.39%
ஈரோடு 25.37%
சிதம்பரம் 25.35%
பொள்ளாச்சி 25.02%
தேனி 24.99%
தஞ்சாவூர் 24.96%
திருவள்ளூர் 24.93%
திருவண்ணாமலை 24.92%
நாகப்பட்டினம் 24.92%
கிருஷ்ணகிரி 24.82%
மயிலாடுதுறை 24.76%
அரக்கோணம் 24.71%
திருச்சி 24.7%
கன்னியாகுமரி 24.68%
வேலூர் 24.67%
கடலூர் 24.66%
காஞ்சிபுரம் 24.65%
தென்காசி 24.51%
சிவகங்கை 24.47%
தூத்துக்குடி 24.16%
நீலகிரி 24.00%
ராமநாதபுரம் 23.89%
திருநெல்வேலி 23.78%
ஸ்ரீபெரும்புதூர் 23.53%
மதுரை 22.72%
வடசென்னை 22.05%
தென் சென்னை 21.97%
மத்திய சென்னை 20.09% என்று பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications