தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த மாமல்லபுரம்! - சாதனை படைத்தது எப்படி?
சென்னை: உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான நகரம் மாமல்லபுரம். இது பலரும் அறிந்த செய்தி. 'இந்தச் சுற்றுலா நகரம் தாஜ்மஹாலை தோற்கடித்து அதிக வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துள்ளது' என்பது கடந்த வாரம் வெளியான மகிழ்ச்சியான செய்தி.
இந்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிகையில், '2021-22 ஆண்டில் அதிக வெளிநாட்டுப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வருகை தந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புள்ளிவிவரப்படி மாமல்லபுரத்திற்கு 1,44,984 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை 38,922 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் சுற்றிப்பார்த்துள்ளனர்.
ஆகவே, இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? ஆராய்ச்சியே செய்ய வேண்டாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தை மாமல்லபுரம் பிடித்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். அது 'சென்னை ஒலிம்பியாட்'. உலக செஸ் போட்டி இங்கே நடைபெற்றதன் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து குவிந்துள்ளனர்.

உலக அதிசயமான மாமல்லபுரம்
தற்போது சொல்ல வேண்டிய விஷயம், தாஜ்மஹாலை, மாமல்லபுரம் பின்னுக்குத் தள்ளியதல்ல; சிற்ப வரலாற்றில் உலகையே பின்னுக்குத் தள்ளி மாமல்லபுரம் முன்னால் நிற்கிறது என்பதுதான் ஹைலைட்.
''ஆம், இந்த மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக்கு இணையாக உலகில் எந்த மூலையிலும் ஒரு சிற்பமும் இல்லை'' என்கிறார் சிற்பக்கலை ஆய்வாளர் பேராசிரியர் பாலுசாமி. இவர் மாமல்லபுரத்தில் உள்ள 'அர்ச்சுனன் தபசு' என்ற ஒற்றை சிற்பத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு 500 பக்கங்களுக்கு ஆராய்ச்சி செய்துள்ளார்.
''மாமல்லபுரத்தில் அப்படியென்ன சிறப்பு உள்ளது?'' என்று பாலுசாமியிடம் பேசினோம்.
"பல்லவர்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிற்பக்கலை எப்படி இருந்தது என்பதற்குச் சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. இவர்களுக்கு முன்பாக கல்லில் சிற்பம் வடிக்கும் முறை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பூம்புகார் போன்ற இடங்களில்கூட நமக்குக் கட்டடங்களே இதுவரை கிடைத்துள்ளன.
இந்திய அளவில் அஜந்தா சிற்பக்கலைதான் ஒரு கிளாசிக்கல் மரபைக் கொண்டுவந்துள்ளது. கிமு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த மரபு இந்தியாவில் உருவாகியுள்ளது.
மத்திய இந்தியாவிலிருந்து வளர்ந்த ஒரு மரபுடன் தமிழ்நாட்டில் அதே காலகட்டத்தில் நமக்குக் காணக்கிடைக்காது போன ஒரு கட்டிடக்கலை மரபும் சேர்ந்ததுதான் மாமல்லபுரம் சிற்பக்கலை. அதற்குள் திராவிடக் கட்டடக்கலை என்ற ஒன்று உள்ளது. திராவிடம் என்பதை இங்கே நான் தமிழ் அடையாளமாகவே குறிப்பிடுகிறேன்.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்லவர்கள் வருகிறார்கள். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர்கள் வீழ்ச்சியடைந்துவிடுகிறார்கள். அதன் இன்னொரு பகுதியாக முற்கால சோழர்கள் எழுச்சி பெறுகிறார்கள். பல்லவர்களின் சிற்பக்கலை சோழர்கள் மூலம் மீண்டும் தொடர்கிறது.

சிற்பக்கலையில் பல்லவர்கள்
பல்லவர்களின் சமகாலத்தை சேர்ந்தவர்கள் என பாதாமி சாளுக்கியர்கள் உள்ளனர். பாதாமி, பட்டடகல், அய்கொளெ ஆகிய பகுதிகளில் சாளுக்கியர்களின் நூற்றுக்கணக்கான கோயில்கள் இன்றும் இருக்கின்றன. இதில் 'பாதாமி' என்ற சொல் பல்லவர்கள் காலத்தில் 'வாதாபி' என இருந்தது. 'வா' என்ற எழுத்து சாளுக்கியர்கள் மொழியில் இல்லை. ஆகவே 'வா' என்ற எழுத்துப் பதிலாக 'பா' வந்துவிட்டது.
அஜந்தாவின் நேரடி மரபில் வந்தவைதான் அமராவதி, நாகார்ஜுன கொண்டா. இவை இரண்டு புத்த தளங்கள்தான். இதன் தொடர்ச்சியாக உருவானவைதான் பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களின் சிற்பங்கள்.
இந்த இருவரும் அஜந்தாவின் ஒரு மரபு தொடர்ச்சிதானே தவிர அப்படியே மாதிரி செய்யப்பட்டவைகள் அல்ல. பல்லவர்களின் ஆட்சிப் பகுதியாக நெல்லூர் தொடங்கி காவிரிக்கரை பகுதிவரை இருந்தது. அதுதான் வடதமிழகம். மாமல்லபுரம், மாமண்டூர், தளவானூர் , காஞ்சிபுரம், பல்லாவரம் வரை நீண்டு பரந்திருந்திருந்தது. பல்லவர்களின் கடைசிப் பகுதியாகத் திருச்சி மலைக்கோட்டை உள்ளது. அதன் பிறகு பல்லவர்கள் ஆண்ட பகுதி இல்லை.
மாமல்லபுரத்தில் நான்குவிதமான சிற்ப சிறப்புகள் உள்ளன. ஒன்று குடைவரைக் கோயில் (Rock-cut architecture). இரண்டு, ஒற்றைக் கற்றளி (Monolithic architecture). மூன்றாவது, கட்டுமானக் கோயில். நான்காவது, திறந்தவெளி புடைப்புச்சிற்பம்.

உலகில் இல்லாத அதிசயம்
பல்லவ மன்னர்களில் முதலாம் மகேந்திர வர்மன், முதலாம் நரசிம்ம வர்மன், பரமேசுவர வர்மன், ராஜசிம்மன் ஆகிய நான்குபேர் முக்கியமானவர்கள். 'மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் இந்த நான்கு மன்னர்களும் செய்தனர்' என்றொரு கருத்து உள்ளது. வேறு சிலர், 'மன்னன் ராஜசிம்மன்தான் செய்தான்' என்றும் சொல்கிறார்கள்.
'ஒற்றைக் கற்றளி' என்ற சிற்பக் கலை பல்லவர்களிடம் தனித்துவம் பெற்றது. இந்தச் சிற்பக்கலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. 'கணேச ரதம்'தான் இந்தியாவுக்கே முதல் ஒற்றைக் கற்றளி சிற்பம். இந்த வடிவக் கோயில் கலையைப் பல்லவர்களே பின்பு கைவிட்டுவிட்டார்கள். ஏனென்றால் ஒரு கோயிலின் கலசம் தொடங்கி அடிப்பகுதி வரை அப்படியே ஒரு முழுப் பாறையைச் செதுக்கிச் செய்வது. மிக மிகக் கடினமான முறை. ஆகவே நிறுத்திவிட்டனர்.
அடுத்து திறந்தவெளி புடைப்புச்சிற்பம் (relief). இந்தச் சிற்ப முறையைப் பல்லவர்களைத் தவிர உலகத்தில் வேறு யாருமே செய்யவில்லை. அஜந்தாவில்கூட இல்லை. இதில்தான் அர்ச்சுன ரதம், அர்ச்சுன தபசு, கோவர்த்தன கிரி எல்லாம் வருகின்றன. மூன்று கட்டுமான கோயில்கள் இருக்கின்றன. இதை ராஜசிம்மன்தான் செய்தார். மலை உச்சியில் ஒன்று உள்ளது. கடற்கரை மணலில் ஒன்று உள்ளது. இவை எல்லாம் சாதனைச் சிற்பக் கோயில்கள்.
மாமல்லபுரத்தில் உள்ள பாறைகள் இரும்பை போன்று கடினமானவை. அதில் வெறும் உளிபோன்ற உபகரணங்களை மட்டுமே வைத்து இந்த மாபெரும் சாதனையை பல்லவர்கள் செய்துள்ளனர். அதுவும் முழுப் பாறையை செதுக்கி கோயிலாக மாற்றி உள்ளனர். இதை உடைக்கும்போது சேதமானால் முழு வேலையும் பாழாகிவிடும். அப்படிப்பட்ட சவாலான வேலைகள் இவை. அதையும் செய்து காட்டியவர்கள் பல்லவர்கள்.

சிற்பக் கலைஞர்களின் பல்கலைக்கழகம்
இந்தப் பாறையில்தான் ஐந்து ரதம், பீம ரதம், சகாதேவ ரதம், தர்ம ராஜ ரதம், கணேச ரதம், பிடாரி ரதம் ஆகியவற்றைச் செய்துள்ளனர். ஐந்து ரதம் மட்டுமே ஒரு மாபெரும் சாதனை. அதேபோல் மாமல்லபுர சிற்பங்கள் அனைத்தும் ஒன்றைப்போல் மற்றொன்று இருக்காது. அனைத்தும் தனித்தனியான சிற்பங்கள். ஆகவேதான், ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காலத்தில் சிற்பக் கலைஞர்களின் பல்கலைக்கழகமாக மாமல்லபுரம் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
மாமல்லபுர சிற்பங்களில் 'மஹிசாசுரமர்த்தினி' என்ற ஒரு சிற்பத்தை எடுத்துக் கொண்டால் அதில் முழுக் கதையும் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மஹிசாசுரமர்த்தினியுடன் துர்க்கை போர் புரியும் காட்சிகள் முழுதாக சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பக்கம் பூதகணங்கள். அடுத்த பக்கம் அசுர கணம். ஒரு மொத்த காட்சியையும் அங்கே பார்வையாளர்களின் காட்சிக்கு தடை ஏற்படாமல் வடித்துள்ளனர். இது அந்தக் காலத்து அனிமேஷன். கல் சிற்பத்தில் அதற்குமுன் யாரும் செய்யாத அளவுக்கு அனிமேஷன் செய்துள்ளனர்.
இப்படி பல்வேறு கோணங்களில் சிற்பங்களைச் செய்தது பல்லவர்கள் மட்டும்தான். உலகத்திலுள்ள கலைப்படைப்புகளில் மாமல்லபுரத்தில் உள்ளதைப் போன்ற ஒரு படைப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை எனக் கூறுவது இதற்காகத்தான்" என்கிறார் பாலுசாமி.












Click it and Unblock the Notifications