காமராஜரை எரித்து கொல்ல முயற்சி.. 'அந்த' வார்த்தையை பயன்படுத்தியதால் சிக்கலில் அனிதா ராதாகிருஷ்ணன்!
சென்னை: மறைந்த பெருந்தலைவர் காமராஜரை இந்துத்துவா இயக்கத்தினர் டெல்லியில் உயிரோடு எரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை சுட்டிக்காட்டிப் பேசும் போது 'தகாத'வார்த்தைகளை பயன்படுத்தியதால் தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சேலம் வந்த பிரதமர் மோடி, பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மேடையேறினார். அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதுபெரும் தலைவர் காமராஜருக்குப் புகழாரம் சூட்டினார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி பாஜகவுக்கு வாக்கு கேட்டது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருந்தார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியும் பங்கேற்றிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், சேலத்தில் பிரதமர் மோடி காமராஜரைப் பற்றி பேசுகிறார். ஏதோ காமராஜருடன் கட்டி பிடித்து விளையாடிய மாதிரி பேசி இருக்கிறார் மோடி..... "......." நீங்கள் எல்லாம் என்ன பண்ணினீங்க தெரியுமா? டெல்லியில் அவர் (காமராஜர்) படுத்திருக்கும் போது கொல்லனும்னு நினைச்ச பாவிங்க நீங்க என்றார். இப்பேச்சின் இடையே தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்பது பாஜகவினரின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில், நமது தேசத்தையும் மொழியையும் நதியையும் தாயாக நினைத்து போற்றும் இந்த புண்ணிய பாரதத்தில், பெண் சக்தியை மதித்து வணங்கும் மாசற்ற மாமனிதர் நம் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள். ஆனால், பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது.
ஒரு பாரத பிரதமரின் தாயாரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் உங்கள் மமதைக்கு நிச்சயம் அழிவு உண்டு. பெண்ணியப் போராளி என பெருமைப் பீற்றிக் கொள்ளும் திருமதி. @kanimozhiDMK இந்த பேச்சை விரும்பி ரசித்துக் கேட்டது தான் கேவலத்தின் உச்சம். பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் உங்களுக்கும் உங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் முடிவுரை எழுத துவங்கிவிட்டனர் நம் தமிழக மக்கள்! என ஆவேசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமது சமூக வலைதளப் பக்கங்களில் கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எதிராக இழிவான மன்னிக்க முடியாத வார்த்தையை பேசியதன் மூலம் தி.மு.க. தலைவர்கள் தரம் தாழ்ந்துவிட்டனர். எங்களை விமர்சிக்கவே முடியாத நிலையில் இப்படி செய்துள்ளனர். இப்படி பேசியதை மேடையில் இருந்த திமுக எம்பி கனிமொழி கூட தடுக்கவில்லையே. இது குறித்து தேர்தல் ஆணையம், டிஜிபி கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த வீடியோவை இணைத்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் புகார் மனு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications