அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு.. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி. நெஞ்சு வலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியாக உள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவு
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி, கவுதம சிகாமணி சென்னை, கிரீம்ஸ் ரோட்டிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் கவுதம சிகாமணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனைகள்
நெஞ்சு வலிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதயத்தில் பிரச்சினை இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம்
கடந்த வாரமும் கவுதம சிகாமணி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கோட்டையில் இருந்தார். அவர் தகவல் கிடைத்ததும் உடனடியாக, மருத்துவமனைக்கு கிளம்பி சென்றார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தார். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே, கவுதமசிகாமணி ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக மயக்கம் அடைந்ததாகவும் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை கூறி அவரை டிஸ்சார்ஜ் செய்தது.

உடல்நலம் தேற பிரார்த்தனை
இப்போது மீண்டும் கவுதம சிகாமணி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். கவுதம சிகாமணி விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று, தொகுதி மக்களும், திமுகவினரும் பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் பிரார்த்தனை செய்யும் விவரத்தை குறிப்பிட்டு வருவதை பார்க்க முடிகிறது.

விரைவில் நலம் பெறுவார்
இதுகுறித்து பொன்முடி குடும்ப வட்டாரத்தில் கேட்டபோது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதிலும், பெரிய அளவுக்கு பிரச்சினை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவிலேயே, கவுதமசிகாமணி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தனர். இதனிடையே, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வயிற்று வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்று வலிக்கான காரணம் குறித்து டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications