எடுத்த சபதம் முடிப்பேன்.. கறி தின்னாமல் வெறியோடு காத்திருக்கும் அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை: பட்டிமன்ற பேச்சாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான ராஜ்மோகன் ஒரு தீவிரமான அசைவ பிரியலாம்... ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி போடும் வரை அசைவம் சாப்பிடுவதில்லை என்ற உறுதியோடு அவர் இருக்கிறாராம்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக ராஜ்மோகன் இருக்கிறார். தொடக்கத்தில் விஜய் டிவியின் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அவர் தொடர்ந்து 'பூட் சட்னி' என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமானார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த பட்டிமன்றங்கள் பங்கேற்றும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், பணியாற்றியவர். தொடர்ந்து பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில் பணியாற்றிய அவர் திரைப்படங்களிலும் தலைகாட்டியுள்ளார்.
வேலையில்லா பட்டதாரி, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பாபா பிளாக் ஷீப் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.
இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இவர், கட்சியின் பிரச்சார செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விஜய் அரசின் முதல் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி கல்வித்துறையோடு, தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார் .அதே நேரத்தில் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம்.
சமீபத்தில் கூட இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு தன்னிடம் ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் தர ஒருவர் முன் வந்ததாக பேசியது இவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
ஆனால் அதைவிட தற்போது மற்றொரு ஒரு விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன், இயக்குனர் விக்ரமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போதுதான் ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருந்தார் தமிழ்நாடு பள்ளி பாடநூல் கழக தலைவரான லயோலா மணி. அதாவது நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்ரமன் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்ற பேசியிருந்ததை குறிப்பிட்ட அவர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறந்த அசைவ பிரியர் எனவும், இருந்தாலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறாரோ? அது வரை தான் அசைவ உணவை தொடப் போவதில்லை என்று முடிவில் இருப்பதாகவும், தற்போது வரை அவர் சைவ உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார் என பேசி இருக்கிறார்.
இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. அமைச்சராக இருக்கும் இவர் முதல்வரிடம் எடுத்துச் சொன்னாலே நாளையே கூட அந்த திட்டத்தை தொடங்கி வைத்து விட முடியும். ஆனால் பெயருக்கு இதுபோன்று வெறிகொண்டு விரதம் இருப்பதாக கிளப்பி விடுவது வெற்று விளம்பரத்திற்காகத்தான் என விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications
