ரெடியான கார்கள்.. ஸ்டாலினின் கண் அசைவிற்காக காத்திருக்கும் டாப் அமைச்சர்கள்.. ஆஹா புதுசா இருக்கே
சென்னை: கோடையை சமாளிக்க கோடைவாசஸ்தலத்தை குறி வைத்து இருக்கிறார்களாம் சில தமிழ்நாடு அமைச்சர்கள். இதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர்கள் சிலர் அனுமதி கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கூடும் பேரவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அமர்வில் தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான துறை ரீதியான விவாதங்கள் நடந்து வருகின்றன.
தினமும் ஒரு துறை என்று அமைச்சர்கள் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர். தினமும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் ஒவ்வொரு துறையிலும் காரசாரமான கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று கூட தமிழ்நாடு சட்டசபையில் விவாதம் இரவு வரை நீண்டது. நேற்று இரவு வரை கேள்வி நேரம் விடாமல் நடத்தப்பட்டது.
அதேபோல் எல்லா விதமான கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் விடாமல் அனுமதிக்கப்பட்டது. முன்பெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அதிகம் அனுமதிக்கப்படாது. ஆனால் இப்போதெல்லாம் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட நிறைய உறுப்பினர்கள் நேற்று அவையில் பேசினார்கள்.
பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். உள்துறை மானிய கோரிக்கையின் மீது 2 நாள் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்தும், இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பேசுவார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று காவல்துறை சார்பாக முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார். பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சட்ட மசோதாக்களுக்கு பேரவையின் ஒப்புதல் பெறப்படும். பிறகு, தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படும் தீர்மானம் நிறைவேறும்.
இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனடிப்படையில் பேரவை கூட்டத்தொடர் முடித்து வைப்பதாக ஆளுநர் ஆர். என் ரவிக்கு முறைப்படி ஆணை பிறப்பிப்பார்.
கிட்டத்தட்ட 40 நாட்கள் நடந்த பேரவை கூட்டத்தையொட்டி அமைச்சர்கள் டென்சனோடே இருந்தனர். ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள அவர்களால் இயலவில்லை. தினமும் அதிரடி விவாதம் காரணமாக அமைச்சர்கள் என்ன நடக்கும் என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.
பேரவை கூட்டம் நிறைவு பெறுவதை அடுத்து, வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க அமைச்சர்கள் பலரும் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், குலுமனாலி, சிம்லா என கோடைவாசஸ்தலம் சென்று வர திட்டமிட்டுள்ளனர்.
அமைச்சர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் கோடை வாசஸ்தலத்திற்கு சென்று வர முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல்வரிடம் அவர்கள் அனுமதி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.
நாங்கள் மானியக்கோரிக்கைகளை சிறப்பாக முடித்துவிட்டோம். துறை ரீதியாக பல அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டோம். இனி இந்த அறிவிப்புகளை செயல்படுத்த மட்டுமே வேண்டும். அதை படிப்படியாக செய்து கொள்ள முடியும்.
இந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புகிறோம். அதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புகிறோம் என்று அமைச்சர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம். ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து இதற்கு இன்னும் பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சில அமைச்சர்களை தவிர மற்ற அமைச்சர்கள் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினும் கோடை வாசஸ்தலம் செல்ல ஆலோசிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்கிறது சித்தரஞ்சன் சாலை.












Click it and Unblock the Notifications