சென்னையில் சர்ச்சையான விளம்பர பலகைகள்.. அமைச்சர் கே.என்.நேருவிற்கு அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: அனுமதி இல்லாத விளம்பர பலகைகளை அடியோடு ஒழிப்பதே புதிய சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வருமானம் வரும் என்றால், உயிர் குடிக்கும் மதுக்கடை முதல் ஆபத்தான விளம்பர பேனர்கள் வரை எல்லாமே அரசுக்கு நல்லது தானா" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
" தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும், உண்மை நிலவரத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கடந்த அதிமுகஆட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த ஆணையின்படி, அனுமதி இன்றி நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் பிறகு அதிமுகஆட்சியிலேயே, 2018-ம் ஆண்டில் பல்வேறு நகர்ப்புற சட்டங்களின் கீழ், விளம்பரப் பலகைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் மட்டும் அமைக்க ஏதுவாக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டங்களுக்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடங்களில் விளம்பரங்கள் செய்யும் "ஏகபோக சூழல்" அதிமுகஆட்சியில் உருவாக்கப்பட்டது.

சட்டத்திருத்தத்திற்கு தடை : இப்படியொரு சட்டத்திருத்தத்தை எதிர்த்து, சில விளம்பர நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவ்வழக்கில், சட்டத்திருத்தத்திற்கு தடை விதித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக புதிய விதிகளை உருவாக்க அதிமுகஅரசுக்கு உத்தரவிட்டது. அதிமுகஆட்சி இருக்கும் வரை உயர்நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் விளம்பரப் பலகைகள் நிறுவுவதை முறைப்படுத்த, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 2022-ல் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு, இச்சட்டம் மற்றும் விதிகள் 13-4-2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படை நோக்கம் அனுமதியில்லா விளம்பரப் பலகைகளை அறவே அனுமதிக்க கூடாது என்பதுதான். இச்சட்டத்திற்கு முரணாக வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மட்டுமின்றி, சட்டத்தை மீறி விளம்பரப் பலகைகள் வைக்கும் உரிமைதாரர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட, தடை உத்தரவிற்கு உட்படாத விளம்பரப் பலகைகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டு உள்ளன. ஆனால், இன்னும் ஆங்காங்கே சுமார் 697 விளம்பரப் பலகைகள் நீதிமன்ற தடை உத்தரவுகளால் சென்னை மாநகராட்சியால் அகற்ற இயலாத சூழலில் உள்ளன என்றாலும், அவற்றையும் அகற்றிட பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என்ன : ஆகவே, அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அடியோடு அகற்றுவதே திமுக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட திருத்தத்தின் நோக்கம் என்பதை இந்த விளக்கத்தின் மூலம் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்" இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த அறிக்கையை விமர்சித்துள்ள அறப்போர் இயக்கம். " விளம்பர பலகைகளை அகற்ற முடியாத சூழல் இருந்தால் என்ன செய்யணும்?
அகற்ற முடியாத விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளிக்க புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வரணும். அரசியல் கட்சிகளின் சுய விளம்பர பேனர்களை அகற்ற முடியாத விளம்பர பலகைகள் கணக்கில் சேர்த்து விடணும். வருமானம் வரும் என்றால், உயிர் குடிக்கும் சாராய கடை முதல் ஆபத்தான விளம்பர பேனர்கள் வரை எல்லாமே அரசுக்கு நல்லது தானா" என்று கேள்வி எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications