தமிழகத்தில் கனமழை : எந்த 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
சென்னை: தமிழகத்தில் கனமழை தொடருவதால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலின் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது தென்மேற்கு வங்க கடல், வட இலங்கை பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம்- புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன்பின்னர் உள் மாவட்டங்களினூடாக தமிழகம், கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:
- சென்னை
- திருவள்ளூர்
- கடலூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- வேலூர்
- அரியலூர்
- மயிலாடுதுறை
- நீலகிரி
- திருவாரூர்
- திருச்சி
- சேலம்
- நீலகிரி
- பெரம்பலூர்
- கரூர்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- தருமபுரி
- கள்ளக்குறிச்சி
- திருவண்ணாமலை
- திண்டுக்கல்
- தேனி
- கோவை
- திருப்பத்தூர்
- ராமநாதபுரம்
- ராணிப்பேட்டை
புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் நேற்று 15 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்த அறிவிப்பு விவரம்: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் தமிழகம் புதுவையை நோக்கி நகரக்கூடும். பின்னர் தமிழக, கேரள பகுதியை கடந்து அரபிக் கடலை நோக்கி செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் (கொள்ளிடம்)11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

3 நாட்களுக்கான எச்சரிக்கை
அடுத்து வரும் மூன்று தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்யக்கூடும். அடுத்துவரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும். சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்க கடல், பகுதிகள் மற்றும் அதன் ஒட்டி உள்ள பகுதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இன்றும் நாளையும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை.












Click it and Unblock the Notifications